அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்…உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
AIADMK General Secretary Post Issue: அதிமுக பொதுச் செயலாளர் பதவி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிலும் எதிர் மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இந்த மனு விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்த 2022- ஆம் ஆண்டு எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அதிமுவின் முதன்மை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படாமல் கடந்த 2022- ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக் குழுவின் அடிப்படையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டு என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இதனிடையே, இந்த மனுவை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் உரிமையியல் நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: புதுச்சேரி பொதுக்கூட்டம்: “தமிழ்நாட்டினர் வர வேண்டாம்”.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எடப்பாடிக்கு எதிரான மனு நிராகரிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த நிலையில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுகவுக்கு சம்பந்தமில்லாத திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் எப்படி மனு தாக்கல் செய்யலாம் எனவும், இந்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் தரப்பு வாதங்களை ஏற்றும் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.




உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அதன்படி, உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை எதிர்த்து சூரியமூர்த்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் பொதுக் குழுவின் அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அதிமுகவின் முதன்மை நிர்வாகிகளை கேட்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
பழனிசாமி தரப்பில் எதிர் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு
தற்போது, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கை அவசர வழக்காக விரைந்து முடிக்க வேண்டும் என்று சூரியமூர்த்தி வலியுறுத்த வாய்ப்புகள் உள்ளது. அதே நேரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சார்பில் எதிர் மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: சாதிவாரி கணக்கெடுப்பு கோரி ஆர்ப்பாட்டம்…திமுகவை தவிற பிற கட்சிகளுக்கு அழைப்பு…அன்புமணி!