Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புதுச்சேரி பொதுக்கூட்டம்: “தமிழ்நாட்டினர் வர வேண்டாம்”.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

புதுச்சேரியில் நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்டத்தில், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இக்கூட்டத்தில் அனுமதி கிடையாது என்பதால், தவெகவினர் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு தவெக கேட்டுக்கொண்டுள்ளது.

புதுச்சேரி பொதுக்கூட்டம்: “தமிழ்நாட்டினர் வர வேண்டாம்”.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Dec 2025 11:35 AM IST

சென்னை, டிசம்பர் 08: புதுச்சேரியில் நாளை (டிசம்பர் 9) தவெக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இதையொட்டி, பொதுகூட்டத்திற்கு காவல்துறை தரப்பில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. கரூர் துயரச் சம்பவத்திற்கு பிறகு பொதுவெளியில் விஜய் மேற்கொள்ள உள்ள முதல் கூட்டம் இதுவாகும். இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக்கூட்டம் கல்லூரி உள்அரங்கத்தில் நடைபெற்றது. விஜய் பொதுக்கூட்டம் என்றாலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அவரது கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பது கடினமானதாக மாறியுள்ளது. அந்தவகையில், புதுச்சேரியிலும் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பொதுகூட்டத்திற்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவும் 6 முக்கிய புள்ளிகள்…யார் அவர்கள்!

தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

இதுதொடர்பாக தவெக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில சந்திப்பு நடைபெற உள்ளது. காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டினருக்கு அனுமதி கிடையாது:

மேலும், புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் இக்கூட்டத்தில் அனுமதி கிடையாது. அதனால், தவெகவினர் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் என்னென்ன நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், சிறுவர், சிறுமியர்கள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனுமதி இல்லை.
  • விஜய் வாகனத்தை இரு சக்கர வாகனத்திலோ, வேறு வாகனங்களிலோ பின்தொடரவோ, போக்குவரத்திற்கு இடையூறாகவோ செயல்படக்கூடாது.
  • காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
  • பிளக்ஸ் பேனர், அலங்கார வளைவுகள் உள்ளிட்டவற்றை அனுமதி பெறாமல் வைக்கக்கூடாது.
  • வாகனங்களை காவல்துறை அனுமதித்த பார்க்கிங் இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும், வேறு இடங்களில் நிறுத்தக்கூடாது.
  • நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் சட்டம் ஒழங்கை பேணிப் பாதுகாக்க வேண்டும், பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ, நடந்துக்கொள்வதோ கூடாது.
  • நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் உள்ள கட்டடங்கள், மரங்கள், காம்பவுண்ட் சுவர்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள்), கொடிக்கம்பங்கள் மீது ஏறக் கூடாது.

உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் இதனை பின்பற்றி நடந்துக்கொள்ள வேண்டும் என அக்கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.