தவெக அலையை முறியடிக்க சீமான் போடும் புதிய பிளான்.. இடைத்தேர்தலில் நேரடியாகக் களம் இறங்க முடிவு?
Seeman by-election contest 2026: நாம் தமிழர் கட்சியின் சரிவை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாகக் களம் இறங்க வாய்ப்புள்ளதாகத் திருப்பூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பூர், ஜூலை 18: நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சி தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. திருப்பூரில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் மறைந்த பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் காரிய நிகழ்வின் போது நடந்த ஒரு சுவாரசியமான மற்றும் உருக்கமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: விதிகளை மீறிய அதிகாரிகள்.. நகராட்சி நிர்வாகத் துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
பாரதிராஜா நிகழ்வில் நடந்த உருக்கம்:
அதன்படி, திருப்பூர் கூட்டத்தில் சீமான் பேசியதாவது, “அண்மையில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா அப்பாவுடைய 30-ஆம் நாள் காரிய நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். அப்போது அங்கு வந்த எனது தந்தை வயதுடைய பெரியவர் ஒருவர், என் தோளைத் தட்டி உருக்கமாகப் பேசினார். ‘தம்பி, ஒரு 50 பேரோடவாவது நீ இந்த முறை சட்டமன்றத்திற்குள் நுழைவாய் என்று நான் ரொம்ப ஆசைப்பட்டேன்; ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அதை நினைத்து வருந்தாதே, இப்போது வரவிருக்கும் இடைத்தேர்தலில் நின்றாவது நீ எப்படியாவது உள்ளே போய்விடு’ என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.
அதற்கு நான் சிரித்துக் கொண்டே, ‘நிச்சயம் நான் உறுதியாகப் போயிடுறேன்ப்பா’ என்று பதிலளித்தேன். உடனே அந்தப் பெரியவர், ‘டேய், இதே சிரிப்போட நீ உள்ள போகணும்டா, விட்றாத!’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.”
2026 தேர்தல் பின்னணியும் சரிவும்:
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடுமையான சரிவைச் சந்தித்தது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் பூஜ்ஜியம் (0) இடங்களைப் பெற்றது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 4.2% ஆகக் குறைந்தது. குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் சீமானும் தோல்வியைத் தழுவினார்.
சரிவுக்கான காரணம்:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகக் களமிறங்கி 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக-வின் இந்த அசுர அலை, நாம் தமிழர் கட்சியின் முக்கிய வாக்கு வங்கியைக் பெருமளவில் கவர்ந்ததே அக்கட்சியின் இந்த பலத்த சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
6 தொகுதி இடைத்தேர்தல்:
தற்போது தவெக தலைவர் விஜய் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த தொகுதிகள் என மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் தமிழ்நாட்டில் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்தச் சூழலில், நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பை மீண்டும் வலுப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் மூத்த நிர்வாகிகளின் விருப்பப்படி, இந்த 6 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் சீமான் நேரடியாகக் களம் இறங்குவார் என்று அரசியல் வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிக்க: நாகர்கோவில் சிறை மரண விவகாரம்.. அரசு நிவாரணங்களை நிராகரித்த குடும்பத்தினர்.. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி!
பொது வேட்பாளராகும் சீமான்?
குறிப்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த இசக்கி சுப்பையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். இதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.