10-ஆம் வகுப்பு மாணவன் வெட்டி கொலை…மதுபோதையில் இளைஞர் வெறிச் செயல்…பரபரப்பில் நெல்லை!
Tirunelveli Crime: திருநெல்வேலி மாவட்டத்தில் 10- ஆம் வகுப்பு மாணவனை இளைஞர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து அந்த நபரை கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், பணக்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது 15 வயது மகன் லட்சுமணன். இவர், அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரின் எதிர் வீட்டில் வசித்து வருபவர் ரத்தின வடிவேல். இவர்கள் இரு குடும்பத்தினரும் உறவினர் போல பழகி இருந்தனர். இதனால், லட்சுமணன் அடிக்கடி ரத்தின வடிவேல் வீட்டுக்கு சென்று வருவது வழக்கமாகும். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவன் லட்சுமணன் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, லட்சுமணனை, ரத்தின வடிவில் மகன் சபரி ராஜன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் பேரில், லட்சுமணன் அவரது வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருவரும் டிவி பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, லட்சுமணனுக்கும், சபரி ராஜனுக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
இதில், கடும் கோபம் அடைந்த சபரி ராஜன் மது போதையில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லட்சுமணனை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில், பலத்த வெட்டு காயம் ஏற்பட்ட லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதனால், அச்சமடைந்த சபரி ராஜன், லட்சுமணனை மீட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு பணக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
மேலும் படிக்க: தீ விபத்துக்குள்ளான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. சென்னை பெண்ணுக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு!




தீவிர சிகிச்சை பிரிவில் உயிரிழந்த சிறுவன்
அங்கு, மாணவர் லட்சுமணனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, லட்சுமணன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவர் லட்சுமணன் இன்று வியாழக்கிழமை ( ஜனவரி 8) பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, லட்சுமணனின் உடல் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.
சபரிராஜனை கைது செய்த போலீசார்
இந்த சம்பவம் குறித்து, மாரியப்பன் அளித்த புகாரின் அடிப்படையில், பணகுடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சபரி ராஜனை கைது செய்தனர். மேலும், பள்ளி மாணவனை கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும், இதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10- ஆம் வகுப்பு மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அமலாக்கத்துறை பற்ற வைத்த நெருப்பு…களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை…விசாரணை வளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு?