அமலாக்கத்துறை பற்ற வைத்த நெருப்பு…களமிறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை…விசாரணை வளையத்தில் அமைச்சர் கே.என்.நேரு?
Minister K N Nehru: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அமைச்சர் கே. என். நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தமிழக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சராக இருந்து வருபவர் கே. என். நேரு. இவரது துறையில் நகராட்சி நிர்வாகத்தில் ஒப்பந்தங்கள் வழங்குவதில் ரூ. 1,020 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை இரு முறை கடிதம் அனுப்பி இருந்தது. பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையில் கிடைக்கப்பெற்ற டிஜிட்டல் கருவிகளில் பதிவாகி இருந்த தகவல்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்தில் நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதற்கு ஒவ்வொருவரிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் பெறப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விசாரணையில் இறங்கிய லஞ்ச ஓழிப்பு துறை
அதன்படி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளது. முன்னதாக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நிகழ்ந்தது தொடர்பாக அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதற்கான வழக்குப் பதிவு நகலை அமலாக்க துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
மேலும் படிக்க: ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு…முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பு!




தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி வைப்பு
இந்த கடிதங்களை பெற்ற தமிழக டிஜிபி, முறையான நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த கடிதங்களை ஆய்வு செய்த தமிழக அரசு, மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியபோது, இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே. என். நேருவின் மகன், அருண் நேரு எம். பி. டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
விசாரணை வளையத்தில் வருகிறாரா அமைச்சர் கே.என்.நேரு
அப்போது, இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், தனது மக்களவைத் தொகுதியில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள மக்களின் கோரிக்கைகள் குறித்து நிதி அமைச்சரை சந்தித்ததாக விளக்கம் அளித்து இருந்தார். ஆனால், அவரது தந்தை கே. என். நேரு மீதான அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக எதிர்க் கட்சிகள் விமர்சித்து வந்தன. இந்த நிலையில், நகராட்சி நிர்வாக ஊழல் தொடர்பான விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை கையில் எடுத்துள்ளது. இதனால், அமைச்சர் கே. என். நேரு விரைவில் விசாரணை வளையத்துக்குள் வருவார் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!