ரேஷன் கடைகளில் சானிடரி நாப்கின்.. ரூ.4000 கோடி செலவு.. பட்ஜெட்டை காரணம் காட்டி மறுத்த தமிழக அரசு!!
Sanitary napkins in ration shops: பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என RTI மூலம் சரிபார்க்கப்பட்டது.

உயர்நீதிமன்றம்
சென்னை, டிசம்பர் 17: ரேஷன் கடைகளில் சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அந்த திட்டத்தை அமல்படுத்த ஆண்டுக்கு சுமார் ரூ.4,000 கோடி செலவாகும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை இலவசமாகவோ, மானிய விலையிலோ வழங்கும் திட்டம் உள்ளதா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் உணவுப்பொருள் வழங்கல் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு, அதுபோல எந்த திட்டமும் இல்லை என தமிழக அரசு பதிலளித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் லட்சுமி ராஜா என்பவர் இவ்விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் படிக்க: உரிமம் இல்லாத செல்லப்பிராணிகளுக்கு ரூ.5000 அபராதம்.. 15 குழுக்களை அமைத்த சென்னை மாநகராட்சி..
மானிய விலையிலோ, இலவசமாகவோ நாப்கின்:
அந்தவகையில், உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த அந்த மனுவில், மாதவிடாய் காலங்களில் பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றும், சானிடரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் ஆரோக்கியமற்ற மாற்று முறைகளை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே, ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கடைகளில் மானிய விலையிலோ அல்லது இலவசமாகவோ நாப்கின்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
ரூ.4000 கோடி செலவாகும் என கைவிரித்த அரசு:
இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ரேஷன் கடைகள் மூலம் நாப்கின்கள் வழங்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை என்றும், அத்தகைய திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி வரை செலவாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், கிராமப்புற பெண்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும், பள்ளி மாணவிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த திட்டங்கள் மூலம் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க: தமிழக காவல் துறையில் நீடிக்கும் ஆர்டர்லி முறை.. உடனடியாக திரும்பப்பெற தமிழக பொறுப்பு டிஜிபி அபய்குமார் சிங் உத்தரவு..
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் லிஸ்ட்:
இதற்கு மனுதாரர் தரப்பில், அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாப்கின் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்கள் எத்தனை பேர் உள்ளனர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களின் எண்ணிக்கை என்ன என்பதனை அரசு மற்றும் மனுதாரர் தரப்பு தெளிவாக விளக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.