அதிமுக அதிருப்தியாளர்கள் அணியில் பிளவு?.. எஸ்.பி.வேலுமணி முடிவை எதிர்த்து இபிஎஸ் போராட்டத்தில் தங்கமணி பங்கேற்பு!!
Rift Among AIADMK Dissidents: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டு வந்த அதிருப்தி தலைவர்களிடையே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. சொந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத் தாங்க அனுமதி தராததால் போராட்டத்தைப் புறக்கணிப்பதாக எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் முடிவெடுத்த நிலையில், அதை மீறி முன்னாள் அமைச்சர் தங்கமணி சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
சேலம், ஆகஸ்ட் 14: தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராகக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யக் கோரியும், மேகதாது விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்படுவதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இப்போராட்டத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் எந்தெந்த மாவட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள் என்ற பட்டியலையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்தவர்களுமான முன்னாள் அமைச்சர்களுக்குள் திடீர் விரிசலும் பிளவும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்.. தஞ்சாவூரில் ஆவேசமாக வெடித்த இபிஎஸ்!!
கோரிக்கையும் புறக்கணிப்புக் கடிதமும்:
முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் பி. தங்கமணி ஆகிய மூத்த தலைவர்கள் தங்களுக்கு மீண்டும் சொந்த மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இச்சூழலில், தற்போதைய கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தங்களின் சொந்த மாவட்டங்களில் தலைமை தாங்க தலைமை அனுமதி அளிக்கவில்லை என்பதால், இப்போராட்டத்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக எடப்பாடி பழனிசாமிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர். இந்த எதிர்ப்பு கடிதம் அதிமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் எனக் கருதப்பட்டது.
வேலுமணி முடிவை மீறிய தங்கமணி:
எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் எடுத்த இந்த ஆர்ப்பாட்டப் புறக்கணிப்பு முடிவுக்கு ஆதரவாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி, எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பிற்கு இணங்கச் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேரில் வருகை தந்துள்ளார். தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல்லில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்படாமல், சேலம் மாவட்டத்தில் தலைமை தாங்குமாறு கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது. தலைமை வெளியிட்ட அந்தப் பட்டியலின்படியே தங்கமணி சேலம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது, எஸ்பி வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தலைமையிலான அதிருப்தியாளர் அணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ‘கருப்பு’ பட பாணியில் சோக சம்பவம்.. திருடு போன நகையை மீட்க ஓராண்டாக போராடும் ஏழைப் பெண்!
அதிருப்தி அணியில் பிளவா?
எஸ்.பி. வேலுமணியின் மிக நெருங்கிய ஆதரவாளராகவும் அதிருப்தியாளர்களின் முகமாகவும் பார்க்கப்பட்ட தங்கமணி, தற்போது எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருப்பது, அதிருப்தி தலைவர்களிடையே கருத்து வேறுபாடும் பிளவும் தீவிரமடைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தங்கமணி தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அணிக்கு மீண்டும் ஆதரவாக நிற்கிறாரா அல்லது எஸ்பி வேலுமணி உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளன. இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் பிளவு, வரவிருக்கும் தேர்தல் களத்தில் அதிமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது.