புதுச்சேரியில் தவெக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி…என்ன காரணம்!
Police Lathi Charge Against Tvk Members: புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்துக்கு வந்திருந்த தவெக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். எதற்காக இந்த தடியடி நடத்தப்பட்டது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் .
புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகிறார். புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர். இதனிடையே, பொதுக் கூட்டத்திற்கு சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அதையும் மீறி ஏராளமான கட்சி தொண்டர்கள் உப்பளம் துறைமுகத்தின் வெளியே குவிந்தனர்.
போலீசாரை மீறி உள்ளே நுழைய முயன்ற தவெகவினர்
அவர்கள், துறைமுகத்தின் வாயிலில் பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசாரை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, பொதுக் கூட்டம் நடைபெறும் நுழைவு வாயிலை போலீசார் மூடி அவர்களை தடுக்க முயன்றனர். ஆனால், அவர்களை தடுக்க முடியாததால் தவெக தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் எதிர்பார்க்கும் 40 தொகுதிகள்…திமுகவின் நிலைப்பாடு என்ன!
தவெக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி
இதனால், தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் நாலாபுரமும் சிதறி ஓட தொடங்கினர். இந்த தடியடி குறித்து தகவல் அறிந்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சம்பவ இடத்துக்கு வந்து அலை மோத வேண்டாம் என தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து, ஒவ்வொருவராக பொதுக்கூட்டம் நடைபெறும் நுழைவாயிலின் வழியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் எதிரொலி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தின் போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் விஜயின் பரப்புரை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
அதிகளவில் குவிந்த தவெக தொண்டர்கள்
இந்த நிலையில், புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு பயணத்துக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்காக அனுமதிக்கப்பட்ட நபர்களை மீறி ஏராளமான தொண்டர்கள் கூட்டம் நடைபெறும் பகுதியில் குவிந்தனர்.
உப்பளம் பகுதியில் பெரும் பரபரப்பு
அவர்களை, போலீசார் சமாளிக்க முடியாத காரணத்தினாலும், எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீசாரின் இந்த தடியால் அந்த பகுதியில் திடீரென பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மேலும் படிக்க: எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய குளறுபடி…நாதக வேட்பாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!



