அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..
PMK Internal Issue: பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராமதாஸ் மகன் என்பதைத்தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. விரைவில் மாம்பழச் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம், டிசம்பர் 8, 2025: அன்புமணிக்கும் பாமகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; சில பொறுப்பாளர்கள் கட்சியில் திருட்டுத்தனமாக பொய்யான தகவல்களை தயாரித்து வருகின்றனர் என பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், உட்கட்சி விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணிக்கிடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. கட்சி யாருக்கு சொந்தம் என்ற முனைப்பில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
பாமக உட்கட்சி விவகாரம்:
அன்புமணி நடத்தும் கூட்டங்களுக்கு ராமதாஸ் ஆதரவாளர்கள் வருவதில்லை; அதேபோல் ராமதாஸ் நடத்தும் கூட்டங்களுக்கு அன்புமணி தரப்பினர் கலந்து கொள்வதில்லை. இவ்வாறு கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனை நீடித்து வருகிறது.
மேலும் படிக்க: காங்கிரஸ் எதிர்பார்க்கும் 40 தொகுதிகள்…திமுகவின் நிலைப்பாடு என்ன!
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பாமகவின் தலைவராக அன்புமணியைத் தேர்ந்தெடுத்தது. அதே சமயத்தில், மாம்பழச் சின்னமும் அன்புமணி தரப்பினருக்கே ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்புமணி மற்றும் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு தவறான ஆவணங்களை வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் அன்புமணி தலைவராக அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை – அருள்:
இவ்வாறு பாமகவின் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாமகவிற்கும் அன்புமணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ராமதாஸ் மகன் என்பதைத்தவிர அன்புமணிக்கும் பாமகவுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. விரைவில் மாம்பழச் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். வரும் தேர்தலில் மாம்பழச் சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடப் போகிறோம். ராமதாஸ் தான் பாமக; வேறு யாருடனும் கூட்டணி குறித்து பேசி ஏமாற வேண்டாம்,” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ரூ. 1,020 கோடி ரூபாய் ஊழல்.. அமைச்சர் கே.என் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. டிஜிபிக்கு கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை
மேலும், “கட்சி நிறுவனர் ராமதாஸை காட்டுபவர்களுக்கு 10 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும். அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஏன் துணைபோகிறது என்பது தெரியவில்லை. அவர் தேர்தல் ஆணையத்தைச் சரிகட்டி விட்டார். தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் செல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின்படி அன்புமணிக்கும் பாமகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது,” என தெரிவித்துள்ளார்.f