ரூ. 1,020 கோடி ரூபாய் ஊழல்.. அமைச்சர் கே.என் நேரு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. டிஜிபிக்கு கடிதம் அனுப்பிய அமலாக்கத்துறை
ED Letter To DGP: நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கே. என். நேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, தமிழக காவல்துறை டிஜிபிக்கு இரண்டாவது முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை, டிசம்பர் 8, 2025: திமுகவின் மூத்த அமைச்சரான கே. என். நேரு ரூபாய் 1,020 கோடி வரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுப்பி, வழக்கு பதிவு செய்ய தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பில் ஆளும் தமிழக அரசு அமைச்சர்கள் மீது தொடர் சோதனைகளும் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. அவர் ஓராண்டுக்கு மேல் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இதன் காரணமாக அவர் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மீது டாஸ்மாக் மற்றும் மணல் கொள்ளை தொடர்பான வழக்குகளும் தொடர்ந்தன.
மேலும் படிக்க: குளு குளுவென மாறப்போகும் தமிழகம்.. இனி மழை கிடையாது – வெதர்மேன் சொன்னது என்ன?
ரூ.1020 கோடி ஊழல் செய்ததாக அமைச்சர் கே.என்.நேரு மீது குற்றச்சாட்டு:
இந்தச் சூழலில், தற்போது திமுகவின் முதன்மைச் செயலாளரும் மூத்த அமைச்சருமான கே. என். நேருவின் மேல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. வழக்கு பதிவு செய்ய கோரியும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் கட்டட நிர்மாணம், கழிப்பறை அமைத்தல், அவுட்சோர்சிங் தூய்மை பணியாளர்கள் பணிகள் போன்றவற்றிற்கான அவுட்சோர்சிங் டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு, ஒவ்வொரு டெண்டருக்கும் 7.5% முதல் 10% வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும், இந்த ஊழலில் ரூ.1,020 கோடி வரை பணம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: எஸ்ஐஆர் பணியில் மிகப்பெரிய குளறுபடி…நாதக வேட்பாளர் இறந்ததாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
டிஜிட்டல் ஆதாரங்களை சமர்பித்து அமலாக்கத்துறை:
அதே சமயம், லஞ்சத் தொகை வெளிநாடுகளுக்கும் ஹவாலா முறையிலும் பரிமாறப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் கே. என். நேரு மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் போன்கள், டிஜிட்டல் சாதனங்களில் கிடைத்த WhatsApp செய்திகள், 300க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் அமலாக்கத்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 258 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களையும் தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கக்கோரி இரண்டாவது முறையாக கடிதம்:
அமலாக்கத்துறை கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை அல்ல. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கூட, தமிழக டிஜிபிக்கு வழக்கு பதிவு செய்ய கோரி அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கே. என். நேரு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த, தமிழக காவல்துறை டிஜிபிக்கு இரண்டாவது முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.