சென்னையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை.. போதை ஊசிகள், மாத்திரைகள் பறிமுதல்; 5-க்கும் மேற்பட்டோர் கைது!!
Porur Avadi police drug raid college hostels: போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 30 காவல் நிலையப் பகுதிகளில் காலை முதலே தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. போரூர் பகுதியில் 5-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, போதை ஊசிகள், மாத்திரைகள் மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை, நவ.20: தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சென்னை ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை முதலே தீவிர போதைப்பொருள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, போரூர் பகுதியில் உதவி ஆணையர் தலைமையில் நான்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் பத்து உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அண்மையில் ரூ.40 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு இந்தச் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குள் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அமைந்துள்ள நிலையில், போரூர் பகுதியில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகள் இருப்பதால், மாணவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாக வைத்துக் கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. நிஷாந்த் பரபரப்பு வாக்குமூலம்.. மீனாட்சியின் தாயாரை நோக்கி போலீசார்!!
30 காவல் நிலையங்களில் ஒரே நேரத்தில் சோதனை:
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 30 காவல் நிலைய எல்லைகளிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுவார்கள், போதைப்பொருளால் உயிரிழப்பு ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், மத்திய ஏஜென்சிகள் பறிமுதல் செய்தாலும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் எனத் துறை ரீதியாகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், காவல்துறையினர் இந்தச் சோதனையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
போரூரில் கைது மற்றும் பொருட்கள் பறிமுதல்:
போரூர் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதை ஊசிகள், போதை மாத்திரைகள் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதோடு, மாணவர்கள் தங்கும் விடுதிகள், அவற்றின் அருகே உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு.. அன்று கதவு பூட்டவில்லையா? குடும்பத்தினரிடம் துருவி துருவி கேள்விகளை கேட்கும் சிபிசிஐடி அதிகாரிகள்..
மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் தொடரும் ஆய்வு:
போதைப்பொருள் சப்ளை செய்யும் நபர்கள் மாணவர்கள் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ளனரா என்றும், மாணவர்களுக்குப் போதைப் பழக்கம் உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மாணவர்களைச் சென்றடையக் கூடாது என்றும், அவர்கள் போதைக்கு அடிமையாகக் கூடாது என்ற நோக்கிலும், போதைப்பொருளை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் இந்தச் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.