மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு.. நிஷாந்த் பரபரப்பு வாக்குமூலம்.. மீனாட்சியின் தாயாரை நோக்கி போலீசார்!!
Madurai jewel shop Robbery: மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ 384 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட நிஷாந்த் ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். கொள்ளை மற்றும் தப்பிச் செல்ல மூன்று இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது
மதுரை, நவ.20: மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ‘தனிஷ்க்’ நகைக்கடையில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை சுமார் 11 கிலோ 384 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான நிஷாந்தை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்டம் முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு நேற்று உத்தரவிட்டார். அதன்படி, மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் வைத்து நிஷாந்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் காவல் விசாரணையின் போது, கொள்ளைச் சம்பவத்தின் போதும் அதற்குப் பிறகும் நிஷாந்த் மூன்று இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தியதாகப் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு.. அன்று கதவு பூட்டவில்லையா? குடும்பத்தினரிடம் துருவி துருவி கேள்விகளை கேட்கும் சிபிசிஐடி அதிகாரிகள்..
3 இருசக்கர வாகனங்களின் பயன்பாடு குறித்த விவரம்:
போலீஸ் விசாரணையில் நிஷாந்த் அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, கடந்த 5-ஆம் தேதி கொள்ளையடிக்க முயற்சித்த போது மீனாட்சியின் தாயாருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கொள்ளைச் சம்பவம் அரங்கேற்றப்பட்ட போது மதுரை சர்வேயர் காலனி பகுதியில் வாடகைக்கு இருசக்கர வாகனம் ஒன்றை எடுத்துப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கொள்ளையை முடித்த பிறகு தனது ஹீரோ எக்ஸ்பிரஸ் இருசக்கர வாகனத்தில் சேலம் வரை பயணித்து, அங்குச் சென்ற பிறகு வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டுத் தலைமறைவானதாகவும் நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சியின் தாயாரிடம் விசாரணை நடத்தத் திட்டம்:
கொள்ளை முயற்சியின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இருசக்கர வாகனம் தொடர்பாகவும், வழக்கு தொடர்பான பிற கோணங்களிலும் போலீசார் தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சியின் தாயாரிடமும் விசாரணை நடத்தக் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. வாகனங்கள் எவ்வாறு பெறப்பட்டன, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : காலி தொகுதிகள் 6- ஆக உயர்வு! கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? களமிறங்குகிறாரா ஸ்டாலின்!
மாலை 4 மணி வரை தொடரும் காவல் விசாரணை:
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்ட ஒரு நாள் போலீஸ் காவல் விசாரணை இன்று மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் பல்வேறு கோணங்களில் நிஷாந்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், விசாரணையின் முடிவில் கொள்ளைச் சம்பவம் குறித்த மேலும் பல முக்கியத் தகவல்கள் வெளியாகும் எனக் காவல்துறை தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.