காலி தொகுதிகள் 6- ஆக உயர்வு! கொளத்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? களமிறங்குகிறாரா ஸ்டாலின்!
Kolathur Constituency Vacant : தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ வி. எஸ். பாபு மரணமடைந்த நிலையில், காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. இதனால், கொளத்தூர் தொகுதிக்கு எப்போது இடைத் தேர்தல் நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது .
தமிழகத்தில் ஏற்கனவே 5 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில், தற்போது தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு மரணமடைந்து இருப்பதால் காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது. தவெக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி. எஸ். பாபு எம்எல்ஏ திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை எம். ஜி. எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 71 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த அவர், இன்று வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், அவர் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, தமிழக வெற்றுக் கழகத்தின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
காலி சட்டப் பேரவை தொகுதிகள் விவரம்
ஒரு வேட்பாளர் இரு தொகுதிகளில் எம்எல்ஏவாக இருக்க முடியாது என்ற அரசமைப்பு சட்டத்தின் படி, முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்து, பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியே தக்க வைத்துக் கொண்டார். இதனால், திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு காலமானார்!
காலியான தொகுதிகளின் எண்ணிக்கை 6- ஆக உயர்வு
இவர்களைத் தொடர்ந்து, கரூர் அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், விராலிமலை அதிமுக எம்எல்ஏ எம்.ஆர். விஜய பாஸ்கர் ஆகியோரும் தங்களது ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாயினர். இதனால், தற்போது 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. முன்னதாக, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர் பதவிகளை ராஜினாமா செய்திருந்த நிலையில் தவெக சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது
இந்த நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி உள்பட 6 தொகுதிகளுக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 2027 தொடக்கத்தில் கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு சேர்த்து இந்த 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் இன்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். கொளத்தூர் இடைத் தேர்தலில் மீண்டும் மு. க. ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஸ்டாலின் வெற்றியை பறித்தவர்! புரசை பாபு முதல் கொளத்தூர் எம்எல்ஏ பதவி வரை.. வி.எஸ்.பாபு கடந்து வந்த பாதை!