ஸ்டாலின் வெற்றியை பறித்தவர்! புரசை பாபு முதல் கொளத்தூர் எம்எல்ஏ பதவி வரை.. வி.எஸ்.பாபு கடந்து வந்த பாதை!
TVK MLA V. S. Babu : கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ வி.எஸ். பாபு உயிரிழந்த நிலையில், அவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை முதல் மரணம் வரை அவர் கடந்து வந்த பாதை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவர் கடந்து வந்த அரசியல் பாதை என்ன என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். சென்னை மாவட்டம், வடசென்னை பகுதியை சேர்ந்த சுந்தரம் பிள்ளை பாபு என்ற வி. எஸ். பாபு கடந்த 1951- ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை சுந்தரம் பிள்ளை ஆவார். வில்லிவாக்கத்தில் செயல்பட்டு வரும் சிங்காரப் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். பின்னர், கல்வியை இடைநிறுத்திய அவர் இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தொடக்கத்தில், அயனாவரம், ஐசி எஃப், புரசைவாக்கம், ஜமாலியா ஆகிய பகுதிகளில் தனது அரசியலை செய்ததால் அவரை புரசை பாபு என்று மக்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் அழைத்தனர்.
பல்வேறு சர்ச்சை- சட்ட சிக்கலில் சிக்கியவர் வி.எஸ்.பாபு
வெகுகாலம் திமுகவில் பயணித்து வந்த வி. எஸ். பாபு, வடசென்னை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் புரசைவாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்தார். அது முதல் 2011- ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக பணிபுரிந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அதே வேளையில் பல்வேறு சர்ச்சைகளிலும், சட்ட சிக்கல்களிலும் சிக்கினார். இதில், 2011- ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு இவர் மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் படிக்க: தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? கன்னியாகுமரியில் 14 வயது சிறுமி மாயம்.. களத்தில் இறங்கிய 2 தனிப்படைகள்!
அதிக வட்டி வசூலிப்பு புகார் முதல் சிறைவாசம் வரை
2011- 2012- ஆம் காலகட்டத்தில் வி. எஸ். பாபு மீது அதிக வட்டி வசூலித்ததாகவும், சொத்துக்களை அபகரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. போலீசாரிடமும் புகார்கள் அளிக்கப்பட்டன. அந்தப் புகார்களின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சில வழக்குகளில் வி. எஸ். பாபு கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார். தொடர் புகார்கள் மற்றும் உள்கட்சி பூசல்கள் காரணமாக திமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது.
புரசை பாபு முதல் கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வரை
இதன் காரணமாக வடசென்னை அரசியலில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், அரசியலில் ஒதுங்கி இருந்த அவர், 2016- ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால், அதிமுகவில் சில ஆண்டுகள் இருந்தும், அவருக்கு முக்கிய பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால், தவெகவில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் எதிர்த்து போட்டியிட்டு 82,997 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக பதவியேற்று 4 மாதங்களில் அவர் அரசியலில் இருந்தும், வாழ்விலிருந்தும் நிரந்தர ஓய்வை பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபு காலமானார்!