“Guidance நிறுவனத்துக்கே Guidance இல்லை என்ற நிலை!” – 15 அதிகாரிகள் பணிநீக்கம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
முதலீடுகளை ஈர்ப்பதில் பல ஆண்டுகளாக அனுபவமும் அர்ப்பணிப்பும் கொண்டு பணியாற்றிய அதிகாரிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என எப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு தமிழக அரசும், தொழில்துறை அமைச்சரின் செயல்பாடுகளுமே காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நவம்பர் 20, 2026: தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தைச் சேர்ந்த 15 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்வதற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
ரகசியத் தகவல்கள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் (Guidance Tamil Nadu), முதலீடுகள் தொடர்பான ரகசியத் தகவல்கள் கசிந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பரிமாறப்பட்ட முக்கியத் தகவல்கள் வெளியானதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
இதன் முடிவில், ரகசியக் காப்பு விதிகளை மீறியதாகக் கூறி 15 உயர் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் தற்போது ஆந்திரப் பிரதேச அரசுப் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்தக் கூடாது!
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 20, 2026
இந்த விவகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் Guidance நிறுவனம் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மீது ஊடகங்களில் வெளியாகும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்றும், அவர்களில் பெரும்பாலானோர் அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் பல ஆண்டுகளாக அனுபவமும் அர்ப்பணிப்பும் கொண்டு பணியாற்றிய அதிகாரிகளின் உழைப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்குச் செல்ல அரசே காரணம்
தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்குச் செல்வதற்கு தமிழக அரசும், தொழில்துறை அமைச்சரின் செயல்பாடுகளுமே காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் தொழில் தொடங்குவதற்கான சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பேற்காமல் அதிகாரிகள் மீது பழிபோடுவதாகவும் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர், தொழில்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்
Guidance நிறுவன விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோர் முறையான செய்தியாளர் சந்திப்பை நடத்தி தமிழக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
திரைப்பட நடிகர்களைப் பார்த்து ரசிகர்கள் ஈர்க்கப்படுவதைப் போல தொழில் முதலீடுகளை ஈர்க்க முடியாது என்றும், புதிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், புதிய தொழில் நிறுவனங்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.