“பரந்தூர் விமான நிலைய திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்?”.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
Parandur airport project abandoned: ரூ.27,000 கோடி மதிப்பிலான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த விவகாரத்தில், அரசுப் பணம் செலவழிக்கப்பட்ட நிலையில் பாதியில் எப்படித் திட்டத்தைக் கைவிட முடியும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை, நவ.20: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் ரூ.27,000 கோடி மதிப்பீட்டில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட 48 சதவீத நிலங்களுக்கான இழப்பீடாக ரூ.680 கோடி அரசுப் பணம் செலவிடப்பட்டுள்ள சூழலில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு இத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்துச் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் கௌதமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட திட்டத்தை அரசுப் பணம் செலவழிக்கப்பட்ட நிலையில் பாதியில் எப்படி கைவிட முடியும் என்றும், அந்தப் பகுதி சாத்தியமில்லாதது என்று எப்படிச் சொல்ல முடியும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிக்க: செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு.. அன்று கதவு பூட்டவில்லையா? குடும்பத்தினரிடம் துருவி துருவி கேள்விகளை கேட்கும் சிபிசிஐடி அதிகாரிகள்..
கொள்கை முடிவு என அரசுத் தரப்பு வாதம்:
நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விமான நிலையம் அமையவுள்ள பகுதியில் நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அமைந்திருப்பதால் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது மிகவும் சிக்கலானதாக உள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், முந்தைய தவறான முடிவுகளைத் திருத்தும் வகையிலும், பொதுநலன் கருதியும் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது என்பது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவிக்கப்பட்டது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது தொடர்பான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு:
இந்த வழக்கில் மனுவுக்குப் பதிலளிக்கத் தங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்தப் பொதுநல மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிக்க: “சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் என்ன முடிவு?”.. சஸ்பென்ஸ் வைத்த சிபிஐ வீரபாண்டியன்!!
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவரம்:
பரந்தூர் விமான நிலையத்திற்காக ஏற்கனவே பெருமளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தைக் கைவிடும் அரசின் கொள்கை முடிவு சட்டரீதியான பரிசீலனைகளுக்கு உட்பட்டுள்ளது. அரசாணை வெளியீடு மற்றும் அரசுத் தரப்புப் பதில்களுக்குப் பிறகு, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவுகள் எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் சட்ட வட்டாரங்களிடையே உருவாகியுள்ளது.