செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கு.. அன்று கதவு பூட்டவில்லையா? குடும்பத்தினரிடம் துருவி துருவி கேள்விகளை கேட்கும் சிபிசிஐடி அதிகாரிகள்..
Gingee Missing Girl: சிறுமி காணாமல் போன அதிகாலையில் வீட்டின் முன்பக்கக் கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் திறந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இரவு உறங்கச் செல்லும்போது கதவு பூட்டப்பட்டிருந்ததா, திறந்தே விடப்பட்டிருந்ததா அல்லது வீட்டுக்குள் இருந்த யாராவது கதவைத் திறந்தார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நவம்பர் 20, 2026: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஏழு வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில், ஒரு மாதத்தைக் கடந்தும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காதது பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி எங்கு சென்றார், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாயமான சிறுமி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான வடிவேலு – பவானி தம்பதியின் ஏழு வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு உறங்கச் சென்ற சிறுமி, அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார்.
காடுகள், கிணறுகள், நீர்நிலைகள், செங்கல் சூளைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. மேலும், சிசிடிவி காட்சிகள், செல்போன் தரவுகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தும் சிறுமி குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பெற்றோரின் வாக்குமூலங்களில் முரண்பாடுகள்?
வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அதிகாரிகள், குடும்பத்தினரிடம் ஏற்கெனவே பெறப்பட்ட வாக்குமூலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, சிறுமியின் தாய் பவானி, தந்தை வடிவேலு மற்றும் குடும்பத்தினரின் ஆரம்பகட்ட வாக்குமூலங்களில் சில முரண்பாடுகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: “முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு!”.. குவிந்த போலீசார்.. குவாரி விதிமீறல் வழக்கில் அதிரடி சோதனை!!
திறக்கப்படாத கதவா? திறந்திருந்த கதவா?
சிறுமி காணாமல் போன அதிகாலையில் வீட்டின் முன்பக்கக் கதவு தாழ்ப்பாள் போடப்படாமல் திறந்திருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இரவு உறங்கச் செல்லும்போது கதவு பூட்டப்பட்டிருந்ததா, திறந்தே விடப்பட்டிருந்ததா அல்லது வீட்டுக்குள் இருந்த யாராவது கதவைத் திறந்தார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும், சிறுமி மாயமான நள்ளிரவில் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு, குழந்தை ‘அம்மா, அம்மா’ என்று அழுதுகொண்டே அழைக்கும் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு வெளியே இருந்தவருக்கே அந்தக் குரல் கேட்ட நிலையில், வீட்டுக்குள் இருந்த குடும்பத்தினருக்கு ஏன் கேட்கவில்லை என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செல்போன், வங்கிப் பரிவர்த்தனைகள் ஆய்வு
குடும்பத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களின் தரவுகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்களையும் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் பெற்றோரின் செல்போன்களுக்கு யார் யாரெல்லாம் தொடர்புகொண்டுள்ளனர், வங்கிக் கணக்குகளில் யாரிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: ஆந்திராவுக்கு தமிழக முதலீட்டு ரகசியங்கள் கசிந்ததா?.. முன்னாள் ‘கைடன்ஸ்’ ஊழியர்களால் வெடித்த பரபரப்பு!
இதற்கிடையே, லாரி ஓட்டுநர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அருகிலுள்ள காட்டுப்பகுதிகள் மற்றும் செங்கல் சூளைகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு மாதத்தைக் கடந்தும் நீடிக்கும் மர்மம்
கதவு திறந்திருந்தது, குழந்தையின் அழுகுரல் கேட்டதாகக் கூறப்படும் தகவல், குடும்பத்தினரின் வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள், செல்போன் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் எனப் பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருப்பினும், சிறுமி மாயமாகி ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரை உறுதியான தடயம் கிடைக்கவில்லை. ஹேமலதா உயிருடன் இருக்கிறாரா, அவர் எங்கு இருக்கிறார் என்பது கூடத் தெரியாத நிலையில், இந்த வழக்கு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.