AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திமுகவும் தவெகவும் போடும் பிச்சையில் காங்கிரஸ் பிழைக்கிறது!” – மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

Nainar Nagendran VS Manickam Tagore: தமிழகத்தின் முக்கியமான உரிமைப் பிரச்சினைகளையும் தனது பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர் உரிமைகள் தொடர்பாக தமிழக விவசாயிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

“திமுகவும் தவெகவும் போடும் பிச்சையில் காங்கிரஸ் பிழைக்கிறது!” – மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Nov 2026 08:04 AM IST

நவம்பர் 20,2026: தமிழக அரசியலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கும் இடையே சமூக வலைதளங்களில் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸின் கடந்தகால அரசியல் வரலாறு, தேர்தல் தோல்விகள் மற்றும் தமிழக உரிமைகள் தொடர்பான விவகாரங்களைச் சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூர் விமர்சனம் என்ன?

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை விமர்சித்து மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் வழங்கும் ஆதரவால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசியல் நடத்தி வருவது நினைவிருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், தனது கையில் இருக்கும் ஒரு தொகுதியைக்கூட தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், மேடைக்கு மேடை காங்கிரஸை ஒழிப்போம் எனச் சவால் விடுவது தமிழக அரசியலில் மிகப்பெரிய நகைச்சுவை என்றும் நயினார் நாகேந்திரனை விமர்சித்திருந்தார்.

காங்கிரஸின் பழைய வரலாற்றை நினைத்துப் பாருங்கள்


இதற்குப் பதிலளிக்கும் வகையில் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “ஞாபகம் வருகிறதா? தமிழர்களுக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் ஞாபகம் வருகிறதா?” எனத் தொடங்கி மாணிக்கம் தாகூருக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை முதலில் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் தற்போது 5 உறுப்பினர்களாகச் சுருங்கிவிட்டதாகவும், வரும் தேர்தலில் அந்த இடங்களைக்கூட தக்கவைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் தொடர் தோல்வி என விமர்சனம்!

நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எண்ணிக்கை குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள நயினார் நாகேந்திரன், ராஜீவ் காந்தி தலைமையில் 400 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களாக 100 இடங்களைக்கூட எட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: “சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தால் என்ன முடிவு?”.. சஸ்பென்ஸ் வைத்த சிபிஐ வீரபாண்டியன்!!

மேலும், ராகுல் காந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் காங்கிரஸ் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல தசாப்தங்களாக ஆட்சிக்கு வர முடியாத நிலை இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.

கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள்

தமிழகத்தின் முக்கியமான உரிமைப் பிரச்சினைகளையும் தனது பதிவில் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் ஒப்புதலின்றி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர் உரிமைகள் தொடர்பாக தமிழக விவசாயிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தையும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவசரநிலை பிரகடனம் குறித்தும் கேள்வி

1975ஆம் ஆண்டு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி ஜனநாயகத்தை முடக்கியதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்ததும் காங்கிரஸ் கட்சிதான் எனக் குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில், பாஜக ஆட்சியில் மாநில அரசுகள் கலைக்கப்பட்டதில்லை என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தமிழகத்தின் முதலீட்டு கட்டமைப்பு பலவீனமானதா? வழிகாட்டு நிறுவன அதிகாரிகள் பணி நீக்கம் குறித்து டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்

மேலும், வெறும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பயணத்தைத் தொடங்கிய பாஜக இன்று நாட்டை ஆளும் அளவிற்கு வளர்ந்துள்ளதாகவும், தமிழகத்தில் தற்போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே இருந்தாலும் அதனை பாஜகவின் வளர்ச்சிக்கான தொடக்கமாகப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

காமராஜர் வளர்த்த கட்சியின் இன்றைய நிலை இதுதானா?

இறுதியாக, ராஜாஜி மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களால் வளர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, இன்று திமுகவும் தவெகவும் வழங்கும் ஆதரவை நம்பி தமிழகத்தில் அரசியல் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

மற்ற கட்சிகளை விமர்சிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தனது கடந்தகால வரலாற்றையும் தற்போதைய அரசியல் நிலையையும் திரும்பிப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன், “நினைவிருக்கிறதா தம்பி, நினைவிருக்கிறதா?” எனக் குறிப்பிட்டு தனது பதிவை முடித்துள்ளார்.

 

Follow Us