உடல் முழுவதும் காயங்கள்… ஸ்டேப்ளர் பின்களுடன் தவித்த வடமாநிலத் தொழிலாளி.. பாதுகாப்பாக ஒப்படைத்த கோவை போக்குவரத்து காவலருக்கு பாராட்டு!
Coimbatore Incident: போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தனது கடமையுடன் நின்றுவிடாமல், காயங்களுடன் ஆதரவின்றித் தவித்த வடமாநிலத் தொழிலாளியின் நிலையைக் கவனித்து, அவருக்கு உணவளித்து உரிய உதவி கிடைக்க ஏற்பாடு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரனின் மனிதாபிமானச் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 20, 2026: கோவை ஜி.பி. சிக்னல் அருகே உடல் முழுவதும் காயங்களுடனும், காயமடைந்த பகுதிகளில் ஸ்டேப்ளர் பின்கள் அடிக்கப்பட்ட நிலையிலும் தவித்த வடமாநிலத் தொழிலாளியை மீட்டு, உணவளித்து தன்னார்வ அமைப்பிடம் பாதுகாப்பாக ஒப்படைத்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
போதையில் இருப்பதாக நினைத்து விசாரித்த காவலர்
கோவை மாநகரப் போக்குவரத்துத் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பிரபாகரன், ஜி.பி. சிக்னல் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தள்ளாடியபடி நின்றுகொண்டிருந்தார்.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை – அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மு.க.ஸ்டாலின் கண்டனம்
அவர் மதுபோதையில் இருக்கலாம் எனச் சந்தேகித்த பிரபாகரன், அவரிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் அந்த நபர் மதுபோதையில் இல்லை என்பதும், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் கடும் வலியில் தவித்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
உயரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயம்
அந்தத் தொழிலாளரைப் பாதுகாப்பாக அமரவைத்து விசாரித்தபோது, அவரது பெயர் ரோகித் என்பதும், கோவை குரும்பபாளையம் பகுதியில் கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அங்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்குச் சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலையில், காயமடைந்த பகுதிகளில் ஸ்டேப்ளர் பின்கள் அடிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
உணவளித்து தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைத்த காவலர்
ரோகித்தின் பரிதாபமான நிலையைக் கண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன், உடனடியாக அவருக்கு உணவும் குடிநீரும் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும் படிக்க: “Guidance நிறுவனத்துக்கே Guidance இல்லை என்ற நிலை!” – 15 அதிகாரிகள் பணிநீக்கம் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
தொடர்ந்து, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கோவையில் செயல்பட்டு வரும் ‘ஈரநெஞ்சம்’ தன்னார்வ அமைப்பினரைத் தொடர்புகொண்டார். பின்னர் ரோகித்தை அந்த அமைப்பினரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.
மனிதாபிமானச் செயலுக்கு குவியும் பாராட்டு
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தனது கடமையுடன் நின்றுவிடாமல், காயங்களுடன் ஆதரவின்றித் தவித்த வடமாநிலத் தொழிலாளியின் நிலையைக் கவனித்து, அவருக்கு உணவளித்து உரிய உதவி கிடைக்க ஏற்பாடு செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரனின் மனிதாபிமானச் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்தச் செயலுக்குப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.