“தயவுசெய்து அறிவிங்க தலைவரே”.. இனிமேல் யாரோடும் கூட்டணி வேண்டாம்.. மு.க.ஸ்டாலின் முன் ஆ.ராசா வைத்த கோரிக்கை!!
"இன்னொரு பொதுக்கூட்டத்துல யாராவது ஒருத்தர் பேசுறாங்க... ‘நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை நாங்கதான் முடிவு செய்வோம்’ என்று அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுகிறார்கள். நான் கேட்கிறேன்... உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதை முடிவு செய்ய? தயவுசெய்து அடுத்த பொதுக்கூட்டத்திலேயே அறிவிங்க தலைவரே... 'கூட்டணி இனிமேல் யாரோடும் இல்லை, திமுக தனித்துத்தான் போட்டியிடும்' என்று உரக்கச் சொல்லுங்கள்.
திருவாரூர், ஜுன் 25: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசியல் சூழலில், திமுகவின் எதிர்காலக் கூட்டணி நிலைப்பாடு குறித்த மிக முக்கியமான விவாதத்தை அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா பொதுவெளியில் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் முன்னிலையிலேயே ஆ.ராசா இந்த அதிரடி முழக்கத்தை முன்வைத்தார்.
இதையும் படிக்க: அமோனியா வாயு கசிவு விபத்தில் 11 பேர் பலி.. “முதல்வர் விஜய் நேரில் செல்லாதது அதிர்ச்சியளிக்கிறது”.. நயினார் நாகேந்திரன் சாடல்!!
“தயவுசெய்து அறிவிங்க தலைவரே”:
மேடையில் மிக உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய ஆ.ராசா, திமுக இனிவரும் காலங்களில் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், சுய பலத்துடன் தனித்துக் களம் காண வேண்டும் என்றும் முதல்வரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். “இன்னொரு பொதுக்கூட்டத்துல யாராவது ஒருத்தர் பேசுறாங்க… ‘நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதை நாங்கதான் முடிவு செய்வோம்’ என்று அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுகிறார்கள். நான் கேட்கிறேன்… உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அதை முடிவு செய்ய?
தயவுசெய்து அடுத்த பொதுக்கூட்டத்திலேயே அறிவிங்க தலைவரே… ‘கூட்டணி இனிமேல் யாரோடும் இல்லை, திமுக தனித்துத்தான் போட்டியிடும்’ என்று உரக்கச் சொல்லுங்கள். தமிழ்நாட்டைக் காப்பாற்ற நமக்கு வேறு வழியில்லை. நாம் யாரையும் நம்பி இல்லை” என்று ஆ.ராசா மிக ஆக்ரோஷமாகப் பேசினார். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் மொத்த உருவமாக மு.க.ஸ்டாலினைத் தொண்டர்கள் பார்ப்பதாகவும், மக்களை மட்டுமே நம்பி திமுக இயங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் விஜய் மீது மறைமுகத் தாக்குதல்:
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது அரசியல் நகர்வுகளை ஆ.ராசா தனது உரையில் கடுமையாக விமர்சித்தார். பெரிய கூட்டங்களையும், மக்கள் அலைகளையும் காட்டி அரசியல் செய்பவர்களை விமர்சித்த அவர், “யாரோ ஒருத்தர் கூட்டம் நடத்துகிறார், லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள் என்பதால் மட்டுமே ஒரு கட்சியை எடை போட்டுவிட முடியாது. மொத்தக் கட்சியுமே அவ்வளவுதான் இருக்கும். அவர்கள் வந்து நாங்கள்தான் அடுத்த முடிவை எடுப்போம் என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று தவெக-வின் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்துக் மதிப்பிட்டுப் பேசினார்.
தேர்தல் முடிவுகளும் தலைவர்களின் ஆளுமையும்:
ஒரு தேர்தலின் தற்காலிக வெற்றியோ அல்லது தோல்வியோ ஒரு உண்மையான மக்கள் தலைவனை எந்தவொரு காலத்திலும் மாற்றிவிடாது என்பதை விளக்க, அறிஞர் அண்ணா மற்றும் ராஜாஜி ஆகியோரின் வரலாற்றுச் சம்பவங்களை ஆ.ராசா உதாரணங்களாகக் காட்டினார். விருதுநகர் பி.சீனிவாசன் அவர்கள் காமராஜரைத் தோற்கடித்த வரலாற்றுத் தருணத்தில், அண்ணாவை அழைத்துப் பாராட்ட முற்பட்டபோது, அண்ணா அதனை மறுத்தார். இரண்டாம் உலகப் போரில் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும், உலகப் பந்தையும் காப்பாற்றிய வின்சென்ட் சர்ச்சில், போருக்குப் பின் நடந்த தேர்தலில் தோற்றுப்போனார். ஒரு தேர்தல் முடிவை வைத்து மாமனிதர்களை எடை போடக்கூடாது என்று அண்ணா கூறியதை சுட்டிக்காட்டினார்.
ராஜாஜியின் எதிர்வினை:
அதே பாராட்டு விழாவிற்கு ராஜாஜியை அழைத்தபோது, “அவ்வளவு பெரிய மகாத்மா காந்தியை வெறும் இரண்டு இன்ச் அளவுள்ள ஒரு சிறிய தோட்டாதான் சுட்டுக் கொன்றது. அதற்காக அந்தத் தோட்டாவுக்குப் பாராட்டு விழா நடத்த முடியுமா?” என்று ராஜாஜி கேட்டதாகக் குறிப்பிட்ட ஆ.ராசா, தற்போதைய அரசியல் சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒரு தேர்தலை வைத்து மட்டும் எதிரிகளால் வீழ்த்திவிட முடியாது என்று கூறினார்.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
எழுச்சியுடன் அணிவகுக்கும் மக்கள் சக்தி:
திமுகவிற்குத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு இன்னமும் குறையவில்லை என்பதைச் விவரித்த ஆ.ராசா, சென்னையிலிருந்து திருவாரூர் வரும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான தாய்மார்களும், தொண்டர்களும் திரண்டு வந்து முதல்வருக்குக் கொடுத்த வரவேற்பை நினைவு கூர்ந்தார். “தலைவா நாங்கள் இருக்கிறோம், உங்களை மீண்டும் கோட்டையில் அமர வைப்பதே எங்கள் வேலை; உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள், தமிழ்நாடு உங்களைத்தான் நம்பியிருக்கிறது” என்று கைக் குழந்தைகளுடன் வந்த எளிய பெண்கள் முதல்வரிடம் உருகியதாகக் குறிப்பிட்ட அவர், இந்த மக்கள் சக்தி இருக்கும் வரை திமுகவிற்கு எந்தக் கவலையும் இல்லை என்று கூறினார்.