அமோனியா வாயு கசிவு விபத்தில் 11 பேர் பலி.. “முதல்வர் விஜய் நேரில் செல்லாதது அதிர்ச்சியளிக்கிறது”.. நயினார் நாகேந்திரன் சாடல்!!
தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகப் புகாரளித்துள்ள நயினார் நாகேந்திரன், அதற்கு ஆதாரமாக அண்மையில் நடந்த சில அதிர்ச்சித் தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 23, 2026 அன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை, ஜுன் 25: தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழல்கள் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசை நோக்கி அடுக்கடுக்கான விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார். அண்மையில் நிகழ்ந்த அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் ஆறுதல் கூறாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: “மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்!”.. எ.வ.வேலு வீடுகளில் ரெய்டு.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பெரியபாளையம் விபத்து: உயிரிழப்பு 11 ஆக உயர்வு:
கரூரை கைகழுவி விட்டது போல, பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா திரு. @TVKVijayHQ அவர்களே?
திருவள்ளூர் பெரியபாளையம் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து தமிழகத்தையே சோகக்கடலில் ஆழ்த்தியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தாரை…
— Nainar Nagenthran (@NainarBJP) June 25, 2026
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்து தமிழகத்தையே சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், விபத்து நடந்து இத்தனை நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் விஜயை நேரடியாகக் சாடியுள்ள நயினார் நாகேந்திரன், “ஏற்கனவே கரூரை கைகழுவி விட்டது போல, இப்போது பெரியபாளையத்தையும் புறக்கணிக்கிறீர்களா திரு. விஜய் அவர்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாரை இதுவரை நேரில் சென்று சந்திக்காத முதல்வரின் இந்தச் செயல்பாடு, அவரது ஆணவத்தையும் அலட்சியத்தையுமே காட்டுவதாக அவர் சாடியுள்ளார்.
“பனையூருக்கு வந்தால்தான் ஆறுதல் கிடைக்குமா?”
திரைத்துறையினரைத் தொடர்ந்து சந்தித்து வரும் முதல்வர், ஏழை எளிய மக்களின் துயரத்தைப் புறக்கணிப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “சினிமாக்காரர்களை தினசரி சந்தித்துச் சிரித்துப் பேசி மகிழும் உங்களுக்கு, உங்கள் ஆட்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்ல நேரமில்லையா அல்லது மனமில்லையா?” என்று காரமாக வினவியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் பனையூருக்குத் தேடி வந்தால் மட்டும்தான் முதல்வரின் ஆறுதல் வார்த்தைகள் கிடைக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள அவர், மக்களுக்கு வெறும் நிதியுதவி மற்றும் இழப்பீட்டை மட்டும் ‘விட்டெறிந்துவிட்டு’ தனது கடமை முடிந்துவிட்டது என முதல்வர் ஓரம் கட்டுவது என்ன விதமான மனநிலை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே நாளில் 10 பாலியல் வன்கொடுமைகள்:
தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகப் புகாரளித்துள்ள நயினார் நாகேந்திரன், அதற்கு ஆதாரமாக அண்மையில் நடந்த சில அதிர்ச்சித் தகவல்களையும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கடந்த ஜூன் 23, 2026 அன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 10 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருகிவரும் போதைப்பொருள் பழக்கம் மற்றும் தற்போதைய தவெக கட்சியினரின் அராஜகங்கள் என மாநிலத்தில் அடுத்தடுத்துப் பல்வேறு பிரச்சினைகள் அரங்கேறி வரும் வேளையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் முதல்வர் விஜய் மௌனம் காப்பது கண்டனத்திற்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..
“அடுத்த நீரோ மன்னன் விஜய்”
ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது அங்குள்ள நீரோ மன்னன் கவலையின்றி வீணை வாசித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் வரலாற்றுச் சம்பவத்தை ஒப்புமையாகக் காட்டி நயினார் நாகேந்திரன் முதல்வரை விமர்சித்துள்ளார். மாநிலத்தில் மக்கள் இத்தனை துயரங்களைச் சந்தித்து வரும் வேளையில், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடுத்த “நீரோ மன்னன்” போல முதல்வர் பதவியில் விஜய் அமர்ந்திருக்கிறார் என்றும், அவரது உண்மை முகம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுமக்களுக்கு வெளுக்கத் துவங்கிவிட்டது என்றும் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.