திருப்பரங்குன்றத்தில் உச்சகட்டப் பாதுகாப்பு.. 5,600-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிப்பு; மாலையில் மகாதீபம்!!
5,600 Police Deployed in Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் இன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 எஸ்.பி.-க்கள் தலைமையில் 5,600-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் போராட்டங்களுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், பக்தர்கள் கிரிவலம் மற்றும் தரிசனம் செய்யத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, நவ.24: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் இன்று ஒரு நாள் மட்டும் நிபந்தனையுடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்புப் பணிகளுக்காக 12 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5,600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கார்த்திகை மகாதீபத் திருநாளையொட்டி மாலையில் மலை மேல் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : “திருவண்ணாமலையில் அதிகாலையில் ஒளிர்ந்த பரணி தீபம்!”.. விண்ணை முட்டிய அரோகரா முழக்கம்!!
மலைப் பாதை பாதுகாப்பு, சோதனைகள்:
மலைக்குச் செல்லும் பாதை மற்றும் மலை மேல் பகுதி என மொத்தம் 1,774 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கியப் பகுதிகளில் பேரிகார்டுகள் அமைத்து ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், ஐந்து வெடிகுண்டு நிபுணர் குழுவினர் மூலம் அப்பகுதி முழுவதும் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 360 டிகிரி சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, காவல்துறையினர் முழுமையான கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழா நிகழ்வுகள், தடை உத்தரவு:
கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று காலையில், சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் தெய்வானை எழுந்தருளிய சிறிய வைரத் தேரோட்ட வீதி உலா நடைபெற்று வருகிறது. போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கும் சென்று வருவதற்கும் எவ்விதத் தடையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் காலை முதலே ஏராளமான பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதையும் படிக்க: சிறப்பு மிக்க கார்த்திகை மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. பக்தர்களே இதை நோட் பண்ணுங்க!
மருத்துவ மற்றும் அவசரகால ஏற்பாடுகள்:
தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் மற்றும் அவசரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஐந்து இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 11 இடங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அவசரகால ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாலையில் நடைபெறும் மகாதீப நிகழ்வு அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.