AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“திரிஷா பேரவை, வெட்கக்கேடு!”.. 10 படம் நடிச்சா அடுத்த எம்ஜிஆரா?.. கொந்தளித்த அண்ணாமலை!!

Annamalai Slams Trisha Peravai: திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் ஆதரவாளர்களால் 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' தொடங்கப்பட்டதை 'வீ த லீடர்ஸ்' தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். சினிமா வசனம், ரீல்ஸ் மற்றும் பட வசூல் சார்ந்த கலாச்சாரத்திலிருந்து தமிழ்நாடு வெளியே வர வேண்டும் என்றும், இது குறித்துத் திமுக தலைவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“திரிஷா பேரவை, வெட்கக்கேடு!”.. 10 படம் நடிச்சா அடுத்த எம்ஜிஆரா?.. கொந்தளித்த அண்ணாமலை!!
அண்ணாமலை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 24 Nov 2026 08:45 AM IST

சென்னை, நவ.24: நடிகை திரிஷாவின் ஆதரவாளர்களால் திருநெல்வேலியில் ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை‘ என்ற பெயரில் புதிய நற்பணி அமைப்பு தொடங்கப்பட்ட நிகழ்வைக் குறிப்பிட்டு, ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். படித்தவர்களும் ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்டவர்களும் அதிகம் வாழும் திருநெல்வேலி போன்ற ஊரில், இத்தகைய பெயரில் மன்றம் தொடங்கப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என அவர் கூறியுள்ளார். இன்னும் புகைப்படங்களைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுற்றித் திரியும் போக்கு நிலவுவது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், சினிமா மற்றும் சமூக ஊடகப் புகழ் சார்ந்த அணுகுமுறைகளில் இருந்து தமிழக அரசியல் மற்றும் சமூகம் மாற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!

திராவிடக் கட்சிகள் மீதான குற்றச்சாட்டு:

இத்தகைய கலாச்சாரத்தைத் தமிழ்நாட்டில் யார் கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பிய அண்ணாமலை, திரைப்படங்களில் நடித்த எண்ணிக்கையின் அடிப்படையில் தலைவர்களை முன்னிறுத்தும் போக்கைத் திராவிடக் கட்சிகள் உருவாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு படம் நடித்தால் அடுத்த தலைவர், நான்கு படம் நடித்தால் தலைவர், ஆறு படம் நடித்தால் ஒப்பில்லாத தலைவர், பத்து படம் நடித்தால் அடுத்த எம்ஜிஆர் எனப் பார்க்கப்படும் நிலை இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் இந்தக் கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது யார் என்பது குறித்துத் திமுக தலைவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆக்கப்பூர்வமான சமூகத்தின் பங்களிப்பு:

சமூகத்தில் அமைதியாகத் தங்கள் பணிகளைச் செய்து வரும் படித்தவர்கள், தொழில் தொடங்கிப் பலருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் தொழில்முனைவோர் மற்றும் சிறப்பாகச் செயல்பட்டு மக்களைக் காக்கும் மருத்துவர்கள் எனப் பலதரப்பட்ட ஆக்கப்பூர்வமான மக்கள் இருப்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் முன்வைக்கும் கருத்துகளும், அவர்களின் உழைப்பும்தான் சமூகத்தின் உண்மையான பலமாக விளங்குகின்றன எனக் குறிப்பிட்ட அவர், மேலோட்டமான கவர்ச்சி அரசியலைக் கடந்து உண்மையான பங்களிப்புகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது எஸ்பி அலுவலகத்தில் கலெக்டர் புகார் – வெளியான பரபரப்பு தகவல்

ரீல்ஸ், இன்ஃப்ளூயன்சர் பற்றிய விமர்சனம்:

எதையெடுத்தாலும் சினிமா, சினிமா வசனம், ரீல்ஸ், இன்ஃப்ளூயன்சர் மற்றும் சமூக வலைத்தளப் புகழ் ஆகியவையே தமிழ்நாடா எனக் கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இவை மட்டுமே தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வெளியாகும் ஒரு திரைப்படத்தின் வசூல்தான் தமிழ்நாட்டின் அளவையும், வளர்ச்சியையும், மக்களின் சக்தியையும் தீர்மானிக்குமா எனக் காட்டமாக வினவியுள்ள அவர், சினிமா மற்றும் ரீல்ஸ் கலாச்சாரத்திலிருந்து தமிழ்நாடு வெளியே வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow Us