“திருவண்ணாமலையில் அதிகாலையில் ஒளிர்ந்த பரணி தீபம்!”.. விண்ணை முட்டிய அரோகரா முழக்கம்!!
Tiruvannamalai Bharani Deepam: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. ஆன்லைன் பதிவு மற்றும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 3,000 பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை, நவ.24: நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நாளான இன்று (நவ.24) அதிகாலையில் பரணி தீபம் விமர்சையாக ஏற்றப்பட்டது. இரவு முழுவதும் சிறப்புப் பூஜைகள் மற்றும் யாகங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அதிகாலை 3.15 மணியளவில் பரணி நட்சத்திரத்தை ஒட்டிப் பரணி தீபம் ஏற்றப்பட்டுக் கோயில் பிரகாரம் முழுவதுமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், நடிகர் ஸ்ரீமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், இன்று மாலை சரியாக 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
இதையும் படிக்க: சிறப்பு மிக்க கார்த்திகை மாத பெளர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்.. பக்தர்களே இதை நோட் பண்ணுங்க!
பரணி தீபத்தின் சிறப்பு மற்றும் பஞ்சபூதத் தத்துவம்:
கார்த்திகை தீபத் திருநாளில் அதிகாலை நேரத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் தருணத்தை ஒட்டி ஏற்றப்படுவதால் இது பரணி தீபம் என அழைக்கப்படுகிறது. அண்ணாமலையாரின் மூலப் பிரகாரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஜோதியின் மூலம் ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டு, அவை கோயிலின் அனைத்துப் பிரகாரங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. பஞ்சபூதங்களும் இறைவன் என்ற ஜோதிக்குள் அடக்கம் என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த ஐந்து தீபங்கள் ஏற்றப்படுவதாகவும், மாலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கான முக்கியத் தொடக்கமாக இந்தப் பரணி தீபம் திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பதிவு மற்றும் பக்தர்கள் அனுமதி முறை:
இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்கான பக்தர்கள் அனுமதி முறையில் மாற்றம் செய்யப்பட்டு, அனைவரும் கட்டணமின்றிப் பங்கேற்கும் வகையில் ஆன்லைன் பதிவு நடைமுறை பின்பற்றப்பட்டது. கடந்த ஆண்டில் 3,000 முதல் 5,000 பேர் வரை கட்டண ரசீது பெற்று டிக்கெட் மூலம் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த முறை ஆன்லைனில் பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 3,000 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எவ்விதக் கட்டணமும் இன்றி இணைய வழியில் விண்ணப்பித்துத் தரிசனம் பெறும் வகையில் இந்த நடைமுறை வெளிப்படையாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் சாமானிய பக்தர்களும் எளிதாகப் பரணி தீப நிகழ்வில் பங்கேற்று தரிசனம் செய்யும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 21 தலைமுறைக்கும் முக்தி தரும் திருவண்ணாமலை மகா தீப தரிசனத்தின் அற்புத சிறப்புகள்!
மகாதீபத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்பு:
பரணி தீபத்தைத் தொடர்ந்து கோயிலில் இன்று நாள் முழுவதும் பல்வேறு யாகங்கள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் பிரகாரத்தில் தீபம் வலம் வந்த காட்சிகள் பக்தர்களிடையே ஆன்மீகப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளன. கோயிலில் ஏற்றப்பட்ட இந்தப் பரணி தீபத்தின் ஜோதியைக் கொண்டே மாலையில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட உள்ளதால், இதனை மகாதீபத் திருவிழாவின் மிக முக்கியத் தொடக்கப் புள்ளியாக பக்தர்கள் போற்றுகின்றனர். இதனைக் காணத் தமிழகம் மட்டுமின்றிப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.