“அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்கு?”.. ஆளுநரிடம் திமுக கொடுத்த பரபரப்பு கடிதம்!
DMK Seeks Sanction From Governor: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கக் கோரி, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ₹5 கோடி தர முன்வந்ததாக அமைச்சர் பேசிய விவகாரம் தொடர்பாக இந்தக் கடிதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
சென்னை, நவ.24: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது வழக்குத் தொடர உரிய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோரிடம் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பொறுப்பிற்கு ஒருவர் ரூ.5 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாகவும், அவரைத் தொடர்புடைய நபர் தன்னிடம் அழைத்து வந்ததாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தமது உரையில் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தப் பின்னணியில், சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாகத் தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் இந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அரசியலில் குதிக்கிறாரா திரிஷா? இளைய புரட்சித் தலைவி பெயரில் பேரவை- லோகோ வெளியீடு!
முந்தைய புகாரும் சட்ட விவரங்களும்:
இந்த விவகாரம் தொடர்பாகத் திமுகவின் சட்டத் துறை இணைச் செயலாளரும் எழும்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பரந்தாமன், ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு வழிவகை செய்யும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எந்தெந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யலாம் என்பதற்கான காரண அம்சங்களை விரிவாகப் பட்டியலிட்டு ஆளுநருக்கும் தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் முன் அனுமதி கோருவது தொடர்பான சட்டப்பூர்வ அம்சங்களும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
காணொளிப் பதிவு, சட்டப் பிரிவுகள் சுட்டிக்காட்டல்:
அமைச்சர் பேசியதாகக் கூறப்படும் கருத்துகள் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் பரவலாக வெளியாகிப் பொதுவெளியில் இடம் பெற்றுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு அரசு ஊழியருக்கு முறையற்ற பலனாக வழங்குவதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ தொடர்பான குற்றங்கள் நடப்பதை முதற்கட்டமாக வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கருத்துகள் அமைந்துள்ளதாகக் கூறி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இது ஆராயப்பட வேண்டிய அம்சமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: உள்ளாட்சி ஊழியர்களுக்கு புதிய பணிமாறுதல் விதிகள்.. 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர அனுமதி இல்லை!
ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்ட பரிசீலனை:
இந்த விவகாரத்தில் தகுதி வாய்ந்த அதிகாரியாக விளங்கும் ஆளுநர் முன்பாக இந்த மனு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், சட்டத்திற்கு ஏற்பத் தேவையான ஆலோசனைகளைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனு மீது உரிய பரிசீலனை, ஆய்வு, முடிவெடுத்தல் மற்றும் அனுமதி வழங்குதல் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திமுக தரப்பில் ஆளுநரிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.