தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை – சென்னைக்கு மஞ்சள் அலர்ட்!
Southwest Monsoon: நாளை (05-06-2026) தமிழகத்தின் கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு நிற எச்சரிக்கை' (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், கேரளப் பகுதிகளில் இன்று அதிகாரப்பூர்வமாக தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலின் பெரும் பகுதிகளில் பருவமழை வேகமாக முன்னேறி வருவதால், அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலியின் நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 87 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
நாளை (05-06-2026) தமிழகத்தின் கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு நிற எச்சரிக்கை’ (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னைக்கு மஞ்சள் எச்சரிக்கை
சென்னையைப் பொறுத்தவரை நாளை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அவ்வப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’ (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது. பகல் நேர வெப்பநிலை சற்றே குறைந்து 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை
நாளை நீலகிரி, கோவை தவிர்த்து, தென்காசி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய தென் மாவட்டங்களிலும், வடதமிழக மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஈரோடு, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான அவசர எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதேபோல் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், ஜூன் 8ஆம் தேதி வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.