AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Ooty to Masinagudi Travel Alert : ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் பயணம் சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போதுமே தனி அனுபவத்தைக் கொடுக்கும். இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஒரு நாளைக்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு சுற்றுலா செல்ல திட்டமா? சுற்றுலா பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஊட்டி - மசினகுடி சாலை
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Sep 2026 20:43 PM IST

அடர்ந்த காட்டுப் பாதை, அடுத்தடுத்த கொண்டை ஊசி வளைவுகள், சாலையோரம் தென்படும் வனவிலங்குகள் என ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் பயணம் சுற்றுலாப் பயணிகளுக்கு எப்போதுமே தனி அனுபவம். ஆனால், இந்த வழியில் பயணிக்கத் திட்டமிடுபவர்கள் இனி கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழக வனத்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, மசினகுடி – கல்லட்டி சாலையில் சுற்றுலா வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால், பயணிகள் பல மணி நேரம் வழியிலேயே சிக்கித் தவிக்கின்றனர்.

ஊட்டியிலிருந்து மசினகுடிக்கு சுற்றுலா செல்ல திட்டமா?

மைசூரு – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தெப்பக்காட்டில், மசினகுடி – கல்லட்டி சாலையில் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை என்ற அறிவிப்புப் பலகையை வனத்துறையினர் வைத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான பயணிகள் இதைக் கவனிக்காமல் கடந்து செல்கின்றனர். அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மாவனல்லா சோதனைச் சாவடியை அடைந்த பிறகுதான் பலருக்கும் இந்தத் தடை பற்றியே தெரியவருகிறது. இதனால் பாதி வழியில் பயணம் தடைபட்டு, திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதையும் படிக்க : உங்களை மட்டும் கொசுவுக்கு ஏன் அவ்வளவு பிடிக்குது? தப்பிப்பது எப்படி?

ஆபத்தான கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா வாகனப் போக்குவரத்தை முழுமையாகத் தடை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்தே இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இந்தத் தடை, சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் மசினகுடி பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து, நாளொன்றுக்கு 200 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி, கட்டுப்பாட்டில் நீதிமன்றம் சற்றுத் தளர்வு அளித்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான நாட்களில் காலை 11 மணிக்குள்ளாகவே இந்த 200 வாகனங்கள் சென்றுவிடுகின்றன. அதன் பிறகு வரும் சுற்றுலா வாகனங்கள் மாவனல்லா சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தச் சாலை ஏற்கெனவே பலமுறை மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : பிறப்பு சான்றிதழில் பெயர் இல்லையா? பெற்றோரே இதை உடனே கவனிங்க!

சமூக வலைத்தளங்களால் பிரபலமான மசினகுடி

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டியிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் மசினகுடி. இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியும், சாலையைக் கடந்து ஓடும் வனவிலங்குகளும்தான் இந்த பாதையில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வருகின்ரன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மசினகுடி பயணம் டிரெண்டானதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக இங்கு வரத் தொடங்கினர். இதனால் இந்தப் பகுதி தற்போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. இதனையடுத்து மசினகுடி – கல்லட்டி வழியாக ஊட்டி செல்ல விரும்புபவர்கள், காலை 11 மணிக்கு முன்பாகவே மாவனல்லா சோதனைச் சாவடியை அடையும் வகையில் பயணத்தைத் திட்டமிடுவது நல்லது.

Follow Us