ஐ.டி ஊழியர்கள் தான் டார்கெட்.. டூரிஸ்ட் விசாவில் வந்து மெத்தம்பெட்டமைன் விற்பனை.. மகாபலிபுரத்தில் பதுங்கிய நைஜீரியர் மீண்டும் போலீஸ் கஸ்டடியில்!
Chennai Crime: பல்லாவரம் ரேடியல் சாலை அருகே 10 கிராம் போதைப்பொருளுடன் வந்த அவரை பல்லாவரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் அவர் நைஜீரியாவைச் சேர்ந்த பிராமிஸ் சுக்வு (47) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 43 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
நவமபர் 14, 2026: சென்னை தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிராம் ரூ.20 ஆயிரம் வரை மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 47 வயது நபரை போலீசார் கைது செய்து, தற்போது காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டூரிஸ்ட் விசாவில் சென்னைக்கு வந்த அவர், விசா காலம் முடிந்தும் சொந்த நாட்டுக்குத் திரும்பாமல் மகாபலிபுரத்தில் தங்கி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐடி ஊழியர் மூலம் சிக்கிய நைஜீரியர்
சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் பகுதியில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பல்லாவரத்தைச் சேர்ந்த 26 வயது ஐடி ஊழியர் ஒருவர் மெத்தம்பெட்டமைன் பயன்படுத்தி வருவதை கண்டறிந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் எடுத்துரைத்தனர். இதையடுத்து அந்த இளைஞர் தனக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் குறித்த தகவல்களை தெரிவித்தார்.
ஒரு கிராம் ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை
அதன்படி, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரு கிராம் மெத்தம்பெட்டமைனை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர் மூலமாகவே போதைப்பொருள் வாங்குவது போல் போலீசார் பேசி, 10 கிராம் மெத்தம்பெட்டமைன் கேட்டுள்ளனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு தருவதாகக் கூறிய அந்த நபருக்காக போலீசார் காத்திருந்தனர்.
43 கிராம் போதைப்பொருள் பறிமுதல்
அதன்படி, பல்லாவரம் ரேடியல் சாலை அருகே 10 கிராம் போதைப்பொருளுடன் வந்த அவரை பல்லாவரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் போதைப்பொருள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில் அவர் நைஜீரியாவைச் சேர்ந்த பிராமிஸ் சுக்வு (47) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 43 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
டூரிஸ்ட் விசாவில் வந்து மகாபலிபுரத்தில் தங்கியிருந்தார்
மேலும், டூரிஸ்ட் விசாவில் விமானம் மூலம் சென்னைக்கு வந்த அவர், மகாபலிபுரத்தில் தங்கியிருந்துள்ளார். விலை உயர்ந்த துணிகளை விற்பனை செய்வது போல் காட்டிக்கொண்டு, பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் மெத்தம்பெட்டமைனை வாங்கி வந்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசா காலம் முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்குத் திரும்பாமல் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. நவீன வடிவமைப்புடன் களமிறங்கும் ‘ஹீரோ’ சைக்கிள்கள்.. அரசு எடுத்த அசத்தல் நடவடிக்கை!
போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை
இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, போதைப்பொருள் விற்பனை வலையமைப்பு, அவருக்கு பெங்களூருவில் இருந்து போதைப்பொருள் வழங்கியவர்கள் மற்றும் கூட்டாளிகள் குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது அவரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மெத்தம்பெட்டமைன் விற்பனையில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்படுகிறது, இதன் பின்னணியில் செயல்படும் நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவிலேயே இதுதொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.