Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை சம்பவம் – திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்

Shocking Incident : திருவண்ணாமலை மாவட்டம் ஏந்தல் அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காவல்துறையினர் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை பாலியல் வன்கொடுமை சம்பவம் – திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்
நயினார் நாகேந்திரன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Sep 2025 22:25 PM IST

திருவண்ணாமலை, செப்டம்பர் 30 : திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்டத்தில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவண்ணாமலை அருகே ஏந்தல் புறவழிச்சாலையில் தனது சகோதரியுடன் சென்று கொண்டிருந்தபோது, ஏந்தல் கிழக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், காவலர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.  இந்த நிலையில், தமிழக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : திருமணத்தை மீறிய தொடர்பு.. காதலியின் கணவர் அடித்துக்கொலை!

‘திமுக அரசுக்கு தலைகுனிவு’

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டிய காவலர்களே காமுகர்களாக மாறி இளம் பெண்ணை வன்கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது பெண்கள் பாதுகாப்பின் அவல நிலையை வெளிப்படுத்துகிறது. காவல்துறையினரிடமிருந்தே பெண்கள் பாதுகாப்பை கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தலைகுனிய வேண்டிய நிலைமைக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்; குற்றவாளிகளாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

‘திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில், வேலியே பயிரை மேய்ந்தது போல காவல்துறையினரே இத்தகைய பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது தமிழகத்தின் மீதான அழியா களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபிக்கிறது. பெண்களை காக்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளாக மாறுவது மக்களைப் பதட்டத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துகிறது. இந்த அலட்சிய ஆட்சியின் செயற்பாடுகள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!

இந்தச் சம்பவம் தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிருப்தியும் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினரே குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது  காவல்துறையின் மீதான நம்பிக்கையை பெரிதும் கேள்விக்குறியாக்கியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக் கூடாது எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.