குளியலறை துளையில் இருந்த செல்போன்.. கோவையில் வசமாக சிக்கிய இளைஞர்!
Coimbatore Crime News: கோவையில் குளியலறையில் பெண்களை செல்போனில் ரகசியமாகப் படம்பிடித்த ராஜேஷ் கண்ணா என்ற இளைஞரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். சூலூர் சிந்தாமணிபுதூரில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செல்போனில் ஆயிரக்கணக்கான ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர், செப்டம்பர் 29: கோவை மாவட்டத்தில் வீட்டின் குளியலறையில் செல்போன் வைத்து வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அந்த மாவட்டத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் குடியிருப்பு ஒன்றில் தம்பதியினர் தங்களது இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது வீடு இருக்கும் காம்பவுண்ட் ஏரியாவில் அடுத்தடுத்து 5 வீடுகள் உள்ளது. இதில் ஒரு வீட்டில் சில இளைஞர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் தம்பதியினரின் மகள்களில் ஒருவர் செப்டம்பர் 27ஆம் தேதி காலை குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது உள்ளே சென்ற சில நிமிடங்களில் அசாதாரணமான சூழல் இருப்பதை அந்த சிறுமி உணர்ந்துள்ளார். என்னவென்று யோசிக்கையில் அங்கிருந்த இரண்டு வீட்டுக்கும் நடுவே இருக்கும் ஓட்டை வழியாக யாரோ செல்போன் மூலம் வீடியோ எடுப்பது போல தெரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவி கத்தி கூச்சலிட்டு வீட்டிலிருந்த தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: Stupid என திட்டிய பெண்; ஆபாசமாக பேசி அடிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்




இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினரை அழைத்து உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது அருகில் இருந்த மற்றொரு குளியல் அறையில் இருந்து செல்போனுடன் ஒரு இளைஞர் வெளியே வந்து எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். ஆனால் அந்த தம்பதியினரின் அருகே உள்ள வீட்டின் குளியலறை என்பதால் அங்கு தங்கியிருந்த இளைஞர்களிடம் பொதுமக்கள் விசாரித்துள்ளனர். இதில் ஒருவர் மட்டும் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார்.
மேலும் அவரது செல்போனை ஆராய்ந்ததில் அதில் ஏராளமான பள்ளி மாணவிகள், பெண்கள் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் சூலூரில் உள்ள கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்வதாக மோசடி.. குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சின்ன சேலம் சீராகபாடியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பது தெரியவந்தது. 20 வயதான அவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் அந்த இளைஞர்களின் அறையில் வந்து தங்கியுள்ளார். அவரது செல்போனை வாங்கி ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான பெண்கள், பள்ளி மாணவிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருப்பதை கண்டறியப்பட்டது ராஜேஷ் கண்ணா தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார்.
அவரிடம் தொடர் விசாரணை நடைபெற்ற நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜேஷ் கண்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.