AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச்சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்”.. முதல்வருக்கு பிரேமலதா வைத்த கோரிக்கை!!

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைத் தேவையான குடிதண்ணீர் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட பிரேமலதா, "நீர் இன்றி அமையாது உலகு" என்ற வள்ளுவனின் வாக்கினைச் சுட்டிக்காட்டினார். தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது போல, "நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற - நீர்மிகை மாநிலமாக" மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரடி கோரிக்கை விடுத்தார்.

“அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச்சென்று பிரதமரை சந்திக்க வேண்டும்”.. முதல்வருக்கு பிரேமலதா வைத்த கோரிக்கை!!
பிரேமலதா விஜயகாந்த்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jun 2026 11:39 AM IST

சென்னை, ஜுன் 19: மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முதல்வர் விஜய், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று மத்திய அரசிடம் உறுதியான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், மேகதாது அணை விவகாரம் மற்றும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்த முக்கிய தீர்மானத்தின் மீது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது தமிழகத்தின் நீர் மேலாண்மை மற்றும் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து முதல்வர் விஜய் முன்னிலையில் பல்வேறு முக்கிய கருத்துக்களையும் கோரிக்கைகளையும் அவர் முன்வைத்தார்.

இதையும் படிக்க: மேகதாது அணை விவகாரம்: அரசியல் கடந்து நாம் ஓரணியில் நிற்க வேண்டும் – தனித்தீர்மானம் முன்மொழிந்த முதல்வர் விஜய்

ஒன்றுபட்ட தமிழகம் – தீர்மானத்திற்கு ஆதரவு:

சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கான மிக முக்கியமான ஒன்று எனத் தெரிவித்த பிரேமலதா, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒட்டுமொத்த தமிழகமும் எப்போதும் ஒன்றாகவே நிற்கும் என்று கூறினார். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளதாகவும், இந்தத் தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடரும் நதிநீர் சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு எப்போது?

சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை காவேரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்துத் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறதே ஒழிய, இதுவரை எதற்கும் ஒரு நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை என்ற வரலாற்று உண்மையை அவர் சுட்டிக்காட்டினார்.

மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா காவேரி உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்ததையும், கலைஞர் கருணாநிதி பல போராட்டங்களை நடத்தியதையும், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதையும் நினைவு கூர்ந்த அவர், உச்ச நீதிமன்றமும் காவேரி மேலாண்மை வாரியமும் தீர்ப்புகளை வழங்கிய பிறகும் கூட இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்று கவலை தெரிவித்தார்.

மின்மிகை மாநிலம் போல் “நீர் மேலாண்மை” அவசியம்!

ஒவ்வொரு மனிதருக்கும் அடிப்படைத் தேவையான குடிதண்ணீர் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட பிரேமலதா, “நீர் இன்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் வாக்கினைச் சுட்டிக்காட்டினார். தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது போல, “நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்ற – நீர்மிகை மாநிலமாக” மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேரடி கோரிக்கை விடுத்தார்.

பிரேமலதா முன்வைத்த ஆலோசனைகள்:

அண்டை மாநிலங்களிடம் ஒவ்வொரு முறையும் தண்ணீர் கேட்டுப் போராடுவதை விடுத்து, தமிழகத்திற்குள்ளேயே நீர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டும். வரவிருக்கும் மழைக்காலத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். தமிழகத்தில் உள்ள நதிகளை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, அதனை முறையாகச் சேமிப்பதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதையும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

விஜயகாந்த் வழியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்:

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்த், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகப் பல்வேறு அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து டெல்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்ததை பிரேமலதா நினைவு கூர்ந்தார். அதேபோல, தற்போதைய தமிழக முதல்வரும் தேவைப்பட்டால் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்குத் தலைமை தாங்கி அழைத்துச் சென்று மத்திய அரசிடம் உறுதியான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Follow Us