AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஒரு சிலரின் சுயநலம்.. அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் – ஜோதிமணியின் பரபரப்பு பதிவு..

Jothimani X Post: காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் சமூக வலைதளப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலைக் கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது" என தெரிவித்துள்ளார்,

ஒரு சிலரின் சுயநலம்.. அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் – ஜோதிமணியின் பரபரப்பு பதிவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jan 2026 06:40 AM IST

சென்னை, ஜனவரி 3, 2026: தமிழக காங்கிரஸ் கட்சி தொடர்பாக, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவால் அரசியல் களத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு காங்கிரஸில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளதாகவும், கொள்கை நிலைப்பாடுகளையும் அரசியல் செயல்பாடுகளையும் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள் மிகுந்த வேகத்தைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தைப் பொருத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு கட்சிகள் களத்தில் உள்ளன. இதில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் தற்போது வரை எந்தவொரு மாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிடுகிறது.

இந்தச் சூழலில், புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் கூட்டணிக்கு கட்சிகள் வந்தால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என ஒரு மிகப்பெரிய விஷயத்தை முன்வைத்து தொடர்ந்து பேசி வருகிறது.

மக்கள் பிரச்சனைக்காக செயல்படாத காங்கிரஸ்:

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் சமூக வலைதளப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “எந்த ஒரு அரசியல் கட்சியும், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரை, தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச் சாவடி முகவர் பட்டியலைக் கொடுக்க விடாமல் முடக்க வேண்டும் என்று நினைக்காது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது நடக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸில் நடைபெறும் விஷயங்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. கொள்கை நிலைப்பாடுகளை, அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் மிகுந்த வேதனை அளிக்கிறது. தினமும் தமிழ்நாடு காங்கிரஸ், மக்கள் பிரச்சினைகள் அல்லாத தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது.

வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்கும் கூட்டம்:

தமிழ்நாடு, எந்தக் காலத்திலும் இல்லாத ஒரு பேராபத்தை, மதவாத, பிரிவினைவாத, வன்முறை சக்திகளிடமிருந்து எதிர்நோக்கி உள்ளது. எதையாவது செய்து, மக்கள் உணர்வுகளைத் தூண்டி, ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து, பெருந்தலைவர் காமராசர், பெரியார் உள்ளிட்ட மாபெரும் தலைவர்களால் கட்டிக் காக்கப்பட்ட இம்மண்ணின் சமூக நீதி, சுயமரியாதை, மக்கள் நல அரசியல், வளர்ச்சியை குழிதோண்டிப் புதைக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில், எதிர்நோக்கியுள்ள தேர்தலை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த மாபெரும் பொறுப்பை சரியாக உணர்ந்துள்ளதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும், தொடர்ந்து காங்கிரஸ் கொடியை ஒவ்வொரு ஊரிலும் பெருமையோடு கையில் ஏந்தியிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளையும், மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிக்கு அடிபணியாமல் சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமைகளுக்காகப் போராடுவதில் உறுதியோடு இருக்கும் நமது தமிழ்நாட்டு மக்களையும் நாம் கைவிட்டு விடக்கூடாது.

அழிவின் பாதையில் தமிழநாடு காங்கிரஸ்:

தமிழ்நாடு காங்கிரஸில் எவ்வித கட்டுப்பாடுமின்றி தொடரும் உட்கட்சிப் பிரச்சினைகள் மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. சித்தாந்த ரீதியான அரசியலை காத்திரமாக முன்னெடுக்காமல், மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், வெறும் கூட்டல்–கழித்தல்களை மட்டுமே செய்து கொண்டு, ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்பதை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் உணர வேண்டிய நேரம் இது.

மேலும் படிக்க: தமிழக காங்கிரஸ் அழிவுக்கு செல்வப்பெருந்தகையே சான்று…அண்ணாமலை நேரடி அட்டாக்!

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த, அச்சமற்ற அரசியலுக்கு நேர்மாறான பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் சென்று கொண்டிருக்கிறது. அவரது கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்திற்கும் நாம் துரோகம் செய்ய முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் அடையாளமும், மரியாதையும் என்பது, பெருந்தலைவர் காமராசர் கட்டிக் காத்த பாரம்பரியத்திற்கும், நேரு–காந்தி குடும்பத்தின் தியாகத்திற்குமான தமிழ்நாட்டு மக்களின் அன்பும் மரியாதையும் தான் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us