சென்னையில் வீட்டு நாய்களுக்கு சிப் கட்டாயம்.. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை!
Greater Chennai Corporation: சென்னை மாநகராட்சி, வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதை 2025 அக்டோபரில் இருந்து கட்டாயமாக்குகிறது. இதற்கு தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 4: வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவதை கட்டாயமாக்கும் புதிய விதிமுறைகளை சென்னை பெருநகர மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை செய்ய தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனவும், கூடுதலாக உரிமையாளர்கள் தங்கள் நாய்களை வெளியில் அழைத்துச் செல்லும்போது அதன் வாய்க்கு மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைப்பது நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெரு நாய்களுக்கும் மைக்ரோ சிப்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், சென்னையில் உரிமையாளர்களால் வளர்க்கப்படும் வீட்டு நாய்களுக்கு உடலில் சிப் பொருத்தப்படும் எனவும், சுமார் 4 ஆயிரம் தெரு நாய்களுக்கு உடலில் அரிசி வடிவ சிப் பொருத்தவும் மாநகராட்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களுக்கு உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: இதுவரை 28,250 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சொல்லும் டேட்டா..




ஏற்கனவே 2025 ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதில் முதல் கட்டமாக 4,000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டு நாய்களுக்கு பொருத்துவது அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக தெரு நாய்களால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதேசமயம் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது சில நேரங்களில் அவை தங்கள் கட்டுப்பாட்டை மீறி பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: குறுக்கே பாய்ந்த தெரு நாய்கள்.. பைக் விபத்தில் சிறுமி பலி
இதனை தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாவட்டம் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் கூட்டம் கூட்டமாக சுமார் ஐந்து முதல் பத்து நாய்கள் இருப்பதால் வெளியில் பகலில் நடமாடக்கூட பொதுமக்களுக்கு சற்றே அச்சம் நிலவுகிறது. உள்ளாட்சி அமைப்பு ஊழியர்களால் இத்தகைய நாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றிற்கு ரேபிஸ் தடுப்பூசி, கருத்தடை சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டு மீண்டும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் விடப்படுகிறது. அல்லது அரசு சார்பில் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.