MK Stalin : முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடிதம்!
CM MK Stalin Letter: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் குறித்து பிற கட்சி தலைவர்கள் விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் – செப்டம்பர் 3, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பத்து நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் லண்டன் சென்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் புறப்பட்டார். லண்டன் சென்ற அவருக்கு அங்கிருக்கும் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். முதலில் ஜெர்மனி சென்ற அவர் அங்கு பல நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. குறிப்பாக ரூ.720 கோடி முதலீட்டிற்கான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 15,320 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணம் – விமர்சனங்களுக்கு பதிலளிக்கு வகையில் கடிதம்:
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் அவரது வெளிநாட்டு பயணத்தைத் திறம்பட விமர்சித்தன. அதாவது, வெறும் தேர்தலுக்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் எந்த முதலீடுகளும் தமிழகத்திற்கு வராது என்றும் குறிப்பிட்டன. இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியை பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலமாகவும், வேலை வாய்ப்புகளை 15 சதவீதம் வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள். டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சியை பெறும் வகையில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் நான் இந்த வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் கூட்டணி? தவெக சொன்ன முக்கிய தகவல்.. விஜயின் முடிவு தான் இறுதி!
முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
செப்டம்பர் 1 கொலோன் நகரத்திலிருந்து புறப்பட்டு, டசல்டோர்ஃப் நோக்கிப் பயணித்தோம். டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள் நடைபெற்றன. முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ. கார் நிறுவனத்துடன் சந்திப்பு நடைபெற்றது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பும், மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டும் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன், 15,320 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் படிக்க: குறையும் மழை.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை ரிப்போர்ட்..
செப்டம்பர் 2 அன்று காலையில் என்ஆர்டபிள்யூ (NRW) மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட் அவர்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில், தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என்ஆர்டபிள்யூ மாநிலத்தின் தலைமை அமைச்சருடனான கலந்துரையாடலும் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்ச்சியுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் புறப்பட்டேன்” என தெரிவித்துள்ளார்.