குறையும் மழை.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. எச்சரிக்கும் வானிலை ரிப்போர்ட்..
Tamil Nadu Weather Update: தமிழகத்தில் மழையில் தீவிரம் குறைந்து வரும் நிலையில், வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், செப்டம்பர் 3, 2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஒரு இடங்களில் மிதமான மழை பதிவாகியுள்ளது. அந்த வகையில் வேலூர், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, விரிஞ்சிபுரம், பந்தலூர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. மழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து காணப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து செப்டம்பர் 3 2025 தேதியான இன்று காலை அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்து செல்ல கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் பலி.. பிரேத பரிசோதனையில் பகீர்.. சென்னையில் சோகம்!
அதிகரிக்கும் வெப்பநிலை:
மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக செப்டம்பர் 3, 2025 தேதியான இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தரைக்காற்று என்பது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 4 2025 முதல் செப்டம்பர் 9, 2025 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை மட்டுமே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ரூ.60 கோடியில் போதை மிட்டாய்.. அசந்துபோன அதிகாரிகள்.. சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய 2 பேர்!
தமிழகத்தின் மழையின் தீவிரம் அறவே குறைந்துள்ள நிலையில் வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் 38.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டையில் 36.4 டிகிரி செல்சியஸ், கரூரில் 37 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தூத்துக்குடியில் அதிகபட்ச வெப்பநிலை என்பது இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு:
சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 33.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேபோல் சென்னையில் பகல் நேரங்களில் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான அல்லது மிதமான மழை ஒரு சில பகுதிகளில் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை பொறுத்தவரையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக மிதமான மழை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.