புதுச்சேரியில் கூட்டணி? தவெக சொன்ன முக்கிய தகவல்.. விஜயின் முடிவு தான் இறுதி!
TVK on Alliance : கடந்த சில நாட்காள புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்து போட்டியிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த், புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்து இருக்கிறார்.

சென்னை, செப்டம்பர் 03 : கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி (Tamilaga Vettri Kazhagam) அமைத்து போட்டியிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த், புதுச்சேரியில் யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என விளக்கம் அளித்து இருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு (Tamil Nadu Assembly Election) இன்னும் 8 மாத காலங்களே உள்ளது. இதனால், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என போட்டியிடும் நிலையில், நாதக வழக்கம்போல் தனித்தே போட்டியிடுகிறது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பாமக மற்றும் தேமுதிக தங்களின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கவில்லை.




இதற்கிடையில், டிடிவி தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் இணைவார்களா அல்லது என்ன மாதிரியாக முடிவுகளை எடுக்கப்போகிறார் என்பதும் தெரியவில்லை. இப்படியாக அரசியல் நகர்வுகள் இருக்கும் சூழலில், புதிதாக தேர்தல் களத்திற்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டப்பேரவை தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Also Read : தலைவர் விஜயின் தேர்தல் சுற்றுப்பயணம்.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவுகள்..
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும் என சொல்லப்பட்டாலும், புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பாக, தவெக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்த நிலையில், இதற்கு தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், மறுத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கூட்டணி?
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக…
— TVK Party HQ (@TVKPartyHQ) September 3, 2025
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
Also Read : அமெரிக்காவின் 50% வரி விதிப்பு.. வேலை இழக்கும் அபாயம்.. 11 கோரிக்கைகள் முன்வைத்த தலைவர் விஜய்..
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது” என்றார்.