அமெரிக்காவின் 50% வரி விதிப்பு.. வேலை இழக்கும் அபாயம்.. 11 கோரிக்கைகள் முன்வைத்த தலைவர் விஜய்..
TVK Leader Vijay Statement: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகும் தமிழக ஏற்றுமதியாளர்கள், பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் 11 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 31, 2025: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகும் தமிழக ஏற்றுமதியாளர்கள், பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் அமெரிக்கா இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை சுமத்தியது. அதாவது, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது சுமார் 50 சதவீத வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இது இந்தியாவில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல துறைகளில் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்கா பொருட்களை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஏற்கனவே பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்கா பொருட்களை புறக்கணித்து வருகின்றன. முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வலியுறுத்தல்:
இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், “அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் தாங்க முடியாத அளவிற்கு மிகக் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தங்கள் எதிர்காலம் குறித்து கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றி கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.”
Also Read: வாகன ஓட்டிகளுக்கு ஷாக்.. சங்கச்சாவடிகளில் நாளை முதல் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
வேலை இழக்கும் அபாயம்:
வரி அதிகமான காரணத்தினால், அமெரிக்க வணிகர்கள் இந்திய பொருட்களை வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப்பெரிய இடியாகும். இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன.
திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைப் பெற்றிருந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர்.
Also Read: முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. வாக்குறுதி நிறைவேற்ற தவறிவிட்டார் – பிரேமலதா விஜயகாந்த்
முன்வைக்கப்பட்ட 11 கோரிக்கைகள்:
- தொழில் துறை, தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய ஒன்றிய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்.
- வரிவிதிப்புக் காரணமாக செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) ரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக, ஒன்றிய அரசு ஒரு சிறப்பு ஏற்றுமதி நிலைப்படுத்தல் நிதியை உருவாக்க வேண்டும்.
- பாதிப்பிற்கு உள்ளாகும் தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் பாதுகாக்க, தமிழக அரசு அவர்களின் ஊதியத்திற்கு உத்தரவாதம் தருவது, மானியக் கடன் வழங்குவது போன்ற நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
- கடன் வழங்கும் செயல்முறையை எளிதாக்க, பாசல்-3 விதிமுறைகளிலிருந்து MSME நிறுவனங்களை நீக்கி, அதற்கான எளிய வங்கிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.
- கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட துறைகளில் MSME நிறுவனங்கள் பெற்ற கடனில் 5% தள்ளுபடி வழங்கும் வகையில், ஒன்றிய அரசு ஒரு பிரத்யேக வட்டி மானியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
- பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் நிலுவையில் உள்ள கடனில் 30% வரை பிணையமில்லாத கடன்களை அனுமதிக்கும் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனை விரிவுபடுத்த வேண்டும்.
- வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, அவர்கள் வாங்கியிருக்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
- வரிவிதிப்பினால் ஏற்பட்டிருக்கும் சுமையை ஈடுசெய்ய, பருத்தி மற்றும் பிற மூலப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
- அமெரிக்காவைத் தவிர, பிற நாடுகளுக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, ஒரு சிறப்புச் செயல் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
- ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கும் பல்வேறு துறைகளின் தொழிலாளர்களுக்குத் தற்காலிக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
- அமெரிக்காவிற்கு அப்பால் ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த, MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதித் தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும்.