Train schedule changes: மதுரையில் பராமரிப்பு பணி.. குருவாயூர் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
Southern Railway: மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பல ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன, சில பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 வரை இந்த மாற்றங்கள் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

மதுரை, செப்டம்பர் 3: மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம், பகுதியளவு ரத்து ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுவாக இந்தியாவின் போக்குவரத்து துறையில் ரயில்களின் பங்கு அளப்பறியது. மிகப்பெரிய நெட்வொர்க் ஆன ரயில்வே துறையில் அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் ரயில்களின் இயக்கத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. இப்படியான நிலையில் மதுரையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக எந்த மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என பார்க்கலாம்.
ரயில் பயணிகள் கவனத்திற்கு
- தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து காலை 6.55 மணிக்கு மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று வழி மூலம் மயிலாடுதுறை செல்லும். இந்த ரயிலானது கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, புதுக்கோட்டை, கீரனூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரயிலானது செப்டம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மட்டும் வழக்கமான பாதையில் இயக்கப்படும்.
- ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 9,16, 23, 30 ஆகிய நான்கு நாட்களைத் தவிர்த்து செப்டம்பர் 30ம் தேதி வரையிலான மீதமுள்ள நாட்களில் திண்டுக்கல் – செங்கோட்டை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கமாக செங்கோட்டையிலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 3,10, 17, 24 ஆகிய நாட்களைத் தவிர செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு ஈரோடு செல்லும்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளுக்கு முக்கிய தகவல் – டிக்கெட் புக் செய்யும் முறையில் புதிய மாற்றம்
- கேரளாவின் குருவாயூரிலிருந்து இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்களாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் இருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 6,13, 20, 27 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயிலுக்கு அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
- நாகர்கோயிலில் இருந்து செப்டம்பர் 4, 7, 11, 14, 18, 21, 25, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு கூடுதலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 5, 12, 19 ,26 ஆகிய தேதிகளில் ஹைதராபாத் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் விருதுநகர் மானாமதுரை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை,திருச்சி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில் டிக்கெட் முன்பதிவில் 20% தள்ளுபடி – எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
எனவே பயணிகள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.