Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tiruvannamalai: குறுக்கே பாய்ந்த தெரு நாய்கள்.. பைக் விபத்தில் சிறுமி பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், பைக்கில் சென்றபோது நாய்கள் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

Tiruvannamalai: குறுக்கே பாய்ந்த தெரு நாய்கள்.. பைக் விபத்தில் சிறுமி பலி
தெரு நாய்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 03 Sep 2025 07:44 AM

திருவண்ணாமலை, செப்டம்பர் 3: திருவண்ணாமலை மாவட்டத்தில் பைக்கில் சென்ற போது நாய் குறுக்கே வந்ததால் நிகழ்ந்த விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை நாள்தோறும் நாயினால் பாதிக்கப்படுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இப்படியான தெரு நாய்களுக்கு முறையான ரேபிஸ் தடுப்பூசி, கருத்தடை சிகிச்சை ஆகியவை அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தமிழ்நாடு அரசும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில் நாய் குறுக்கே வந்த விபத்தில் சிறுமி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள முள்ளிப்பட்டு காமராஜர் நகர் பகுதியில் கார்த்தி என்பவர் தனது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் நான்கு வயது மகள் அனாமிகாவுடன் வசித்து வந்தார். இதனிடையே சிறுமி அனாமிகாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தை எதையாவது பார்த்து பயந்திருப்பாள் என கருதிய பெற்றோர் உடனடியாக சேத்துப்பட்டு ரோட்டில் உள்ள ஒருவரிடம் மந்திரிப்பதற்காக முடிவு செய்துள்ளனர்.

Also Read: கல்லூரி மாணவியை கடித்து குதறிய தெருநாய்கள்.. முகத்தில் 17 தையல்கள்!

அதன்படி கார்த்தி, தனது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் மகள் அனாமிகாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்ற பைக் தச்சூர் சாலையில் சென்ற போது சுமார் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அவை கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்தி வந்த பைக் மீது பாய்ந்தது.  இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கார்த்தி, தமிழ்ச்செல்வி மற்றும் 4 வயது சிறுமி அனாமிகா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Also Read: நோய் பாதித்த தெரு நாய்கள்.. கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி!

உடனடியாக அப்பகுதியில் திரண்ட மக்கள் அவர்களை மீட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி அனாமிகா உயிரிழந்தாள்.  கார்த்தி மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்து ஆரணி நகர போலீசில் கார்த்தி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெரு நாய் தொல்லையால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.