கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு..
Brain Eating Amoeba: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தீவிரமாக பரவி வரும் நிலையில், மாவட்ட அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், குளங்கள், ரிசார்ட்டுகளில் இருக்கக்கூடிய நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செப்டம்பர் 2, 2025: கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மேனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு கேரளா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 42 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் காரணமாக பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மூன்று மாத குழந்தை மற்றும் 52 வயதுடைய மூதாட்டி உட்பட 2025 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதற்காக கேரள அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதாவது, கிணறுகள், நீச்சல் குளங்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களை ஆய்வு செய்து வருகிறது. இதனைத் தடுப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: இபிஎஸ் உடன் மோதல்? – செங்கோட்டையன் எடுத்த முடிவு!
தமிழகத்தில் மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்:
இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க மாவட்ட அதிகாரிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, குளங்கள், ரிசார்ட்டுகளில் இருக்கக்கூடிய நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும், நீச்சல் குளங்களில் இருக்கும் தண்ணீரை நான்கு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிக்க வேண்டும் எனவும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதை தவிர்க்க பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு? – அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த ரிப்போர்ட்!
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூளை தின்னும் அமீபா எப்படி பரவுகிறது?
இந்த மூளையை தின்னும் அமீபா என்பது நன்னீரில் மட்டுமே வளரக்கூடியது. இது நீச்சல் குளங்களிலோ அல்லது குளங்களிலோ தண்ணீரை நாம் பயன்படுத்தும் போது, குளிக்கும் பொழுது மூக்குவழியாக உடலுக்குள் சென்று, மூளையை சென்றடையும். அங்கு இருக்கும் திசுக்களை அழித்து இந்த பாதிப்பு தொடங்குகிறது. இந்த அமீபா உடலுக்குள் சென்ற ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் மோசமாகத் தொடங்கும். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், நரம்பு வலி, வலிப்பு, மயக்கம் போன்றவை அடங்கும்.