மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் 18 பேர் பாதிப்பு.. தீவிரமாகும் தடுப்பு நடவடிக்கை..
Brain Eating Amoeba: கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் சுமார் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு (2025) தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 41 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் பரவலை தடுக்கும் வகையில் கேரளா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கேரளா, ஆகஸ்ட் 26, 2025: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை கேரளாவில் இதன் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 7 ஆக இருந்தது. ஆனால் தற்போது அது படிப்படியாக உயர்ந்துள்ளது. கேரளாவில் மூளையை தின்னும் அமீபாவால் சுமார் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநில உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்வர் பினராய் விஜயன், இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மூளையை தின்னும் அமீபா – எப்படி பரவுகிறது?
கேரளாவை பொறுத்தவரையில் பருவமழை காலங்களில் பலவிதமான நோய்த்தொற்றுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக அதிக தீவிரம் உடைய நிபா வைரஸ் — அதனைத் தொடர்ந்து தற்போது மூளையை தின்னும் அமீபா பரவி வருகிறது. இந்த அமீபா என்பது அசுத்தமான நீரில் இருந்து மனிதர்களின் சுவாசக் குழாய் அல்லது மூக்கு வழியாக மூளைக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.
Also Read: ஜம்மு காஷ்மீரில் கனமழை … நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழப்பு
மூளைக்கு சென்றதும் இந்த அமீபாக்கள் அங்கு இருக்கக்கூடிய திசுக்களை அழிக்கத் தொடங்குகின்றன. இது நன்னீரில் மட்டுமே வாழக்கூடியது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த அமீபா உடலுக்குள் சென்ற ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் மோசமாகத் தொடங்கும். குறிப்பாக தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து இறக்கம், குழப்பமான மனநிலை, வலிப்பு, மயக்கம் போன்றவை அடங்கும்.
நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை:
தற்போது கேரளாவில் இந்த அமீபாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 41 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: ஒரே சார்ஜில் 500 கி.மீ.. பிரதமர் மோடி தொடங்கி வைத்த சூப்பர் கார்.. 100 நாடுகளுக்கு ஏற்றுமதி!
இதனைத் தொடர்ந்து இந்த நோயைத் தடுப்பதற்காக அரசாங்கம் “ஜலமான் ஜீவன்” எனும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ் மாநிலம் முழுவதிலும் உள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளோரினேஷன் செய்யப்படுகிறது. மேலும் வரும் 2025 ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படவுள்ளன.
இந்த அமீபா குறிப்பாக சுத்தமான நன்னீரில் மட்டுமே வளரக்கூடியது. இது உப்பு நீரிலோ அல்லது உறைந்த நீரிலோ வளராது என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் கிணறுகள் சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் போன்ற நீர்நிலைகளில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.