மே 4 வாக்கு எண்ணிக்கை.. தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு.. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..
Tamilnadu Assembly Election: வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் மற்றும் தமிழக காவல்துறையினர் என கூடுதல் போலீசாரை நியமிக்க முடிவு
வாக்கு எண்ணும் நாளில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி மிக அமைதியாக நடைபெற்று முடிந்தது. 234 சட்டசபை தொகுதிகளில், இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்தவுடன், அனைத்து ஓட்டுப்பதிவு எந்திரங்களும் அந்தந்தத் தொகுதிக்கு உட்பட்ட 62 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. தற்போது எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
இதையும் படிக்க: தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்.. மாநிலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மே 4!
சென்னையில் ஆலோசனைக் கூட்டம்:
அந்த மையங்களில் உள்ள அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்களும் மையங்களுக்கு வெளியே அமர்ந்து எந்திரங்களின் பாதுகாப்பைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை 4ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் தலைமையில், சென்னை கோட்டையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை, தாம்பரம் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு:
இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்த அதிருப்திகள் நடக்காமல் தவிர்க்க, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் சிஆர்பிஎப் (CRPF) வீரர்கள் மற்றும் தமிழக காவல்துறையினர் என கூடுதல் போலீசாரை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதோடு, அன்றைய தினம் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க: வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்.. மே 2ல் தமிழகம் வரும் வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!!
அதிகாரப்பூர்வ அடையாள அட்டை கட்டாயம்:
இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக, வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகள் மூலம் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை இல்லாத எவரையும், எந்தக் காரணத்தைக் கொண்டும் மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. வாக்கு எண்ணிக்கை தொடங்கி, முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கும் வரை பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் கண்காணிப்புப் பணிகள் எவ்விதத் தளர்வும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.