“லாக்கப் மரணங்கள் தமிழகத்திற்கே கலங்கம்”.. காவல்துறையை சீரமைக்க வேண்டும்.. மாணிக்கம் தாக்கூர் முழக்கம்!!
Lockup deaths in Tamil Nadu: மாணிக்கம் தாக்கூர் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழ்நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்கள் மாநிலத்திற்கே பெரும் கலங்கம் என்றும், ஆங்கிலேயர் காலத்து அணுகுமுறையைக் கொண்டுள்ள காவல்துறையைத் தமிழக அரசு உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, ஜூலை 18: தமிழ்நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்கள் மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய கலங்கம். ஆங்கிலேயர் காலத்து நடைமுறைகளைக் கொண்ட காவல்துறையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், லாக்கப் மரணங்கள், மேகதாது அணை விவகாரம் மற்றும் கூடங்குளம், இஸ்ரோ விவகாரங்கள் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிக்க: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!
லாக்கப் மரணங்கள் தமிழகத்திற்கே கலங்கம்:
தமிழகத்தில் அண்மைக்காலமாக விவாதப் பொருளாக மாறியுள்ள காவல் நிலைய மரணங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது மாணிக்கம் தாக்கூர் காரசாரமாகப் பதிலளித்தார். லாக்கப் மரணங்கள் என்பது தமிழகத்தின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய கலங்கமாகும். காவல்துறையில் உள்ள ஒரு சில காவலர்களும், சில அதிகாரிகளும் செய்யும் தவறான செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கே பெரிய கலங்கம் ஏற்படுகிறது. இத்தகைய அதிகாரிகளின் அணுகுமுறை கடுமையான கண்டனத்திற்குரியது.
இது ஒரு ‘ஸ்ட்ரக்சரல் பிராப்ளம்’. ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டே இந்தத் தவறான அணுகுமுறை தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக காவல்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அழுத்தம்தர வேண்டும்:
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முற்படும் விவகாரத்தில் தமிழகம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒற்றைக் குரலில் ஒலிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேகதாது விவகாரத்தில் எந்தவித அரசியலும் பார்க்காமல், அனைத்துக் கட்சிகளும் இணைந்து ‘டீம் தமிழ்நாடு’ என்ற ஒற்றைக் குடையின் கீழ் டெல்லிக்கு வலுவான அழுத்தம் தர வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தேவைப்பட்டால் தமிழக முதலமைச்சர் ஒரு சிறப்புக் குழுவை அமைக்கலாம். தமிழக நீர்வளத்துறை அமைச்சரின் தலைமையின்கீழ் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நம்முடைய கூட்டு அழுத்தத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
சட்டமன்றத் தீர்மானத்திற்குப் பாராட்டு:
மேகதாது விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு நல்ல முன்னெடுப்பாகும். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனைகளை ஏற்று அந்தத் தீர்மானத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வந்த முதலமைச்சரின் அரசியல் பண்பு பாராட்டத்தக்கது. இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மிக முக்கியம்.
நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்:
மத்திய அரசின் சில கொள்கை முக்கிய முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணிக்கம் தாக்கூர், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இஸ்ரோ விவகாரங்களை வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி வலுவாக எழுப்பும் என்று கூறினார். அணுசக்தித் துறையையும் தற்போது தனியாருக்குக் கொடுப்பதற்கான சட்டங்கள் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுவிட்டன. மற்றொரு புறம், அரசாங்கத்தின் மிக முக்கியத் தரவுகளை தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும்படி ஒப்படைத்துள்ளனர். இது எந்த லெவலில் போய் முடியும் என்றே தெரியாத ஒரு அபாயகரமான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!
பிரதமரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இந்த விவகாரத்தை தேசிய பாதுகாப்பு கோணத்தில் பார்க்க வேண்டும். நாட்டின் பாதுகாப்போடு தொடர்புடைய இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை தேவை. இதை சும்மா ஒரு நாள் செய்தியாகக் கடந்து சென்றுவிடக் கூடாது. நாடாளுமன்றத்தில் இதற்காக நான் தனிப்பட்ட முறையிலும் குரல் எழுப்புவேன் என்று கூறினார்.