சீமானுக்கு அடுத்தடுத்த பேரிடி.. நாம் தமிழர் கட்சியில் இருந்து இயக்குனர் களஞ்சியம் விலகல்.. காரணம் என்ன?
Director Kalanjiyam resigns NTK: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வெறுப்பு அரசியல் மற்றும் தரம் தாழ்ந்த தனிநபர் விமர்சனங்களை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியும் திரைப்பட இயக்குனருமான களஞ்சியம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சென்னை, ஜூலை 18: நாம் தமிழர் கட்சியில் கடந்த சில நாட்களாக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய முகமும் பிரபல திரைப்பட இயக்குனருமான களஞ்சியம் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதற்கான விலகல் கடிதத்தை அவர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அனுப்பியுள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலார்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ.தமிழரசன் கடந்த 19ம் தேதி வெளியேறினார்.
இதையும் படிக்க: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க 39 பிரத்தியேக இடங்கள்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு!!
விலகலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
நாம் தமிழர் கட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து வந்த இயக்குனர் களஞ்சியம், சீமானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனது விலகலுக்கான காரணங்களைக் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிற அரசியல் கட்சிகள் மீது சீமான் தொடர்ந்து ‘வெறுப்பு அரசியல்’ செய்து வருவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் தனிநபர்கள் மீது சீமான் வைக்கும் விமர்சனங்களின் தரம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மாறிப்போன தமிழ் தேசியம்:
என்னுடைய அரசியல் புரிதலும், நான் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் வழிமுறைகளும் நாம் தமிழர் கட்சியின் தற்போதைய போக்கில் இருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. தற்போதைய சூழலில், இத்தகைய கடுமையான கருத்து வேறுபாடுகளுடன் நாம் தமிழர் கட்சியில் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காது என்பதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
10 ஆண்டு காலப் பயணம்:
நாம் தமிழர் கட்சியில் ஆரம்பக்காலம் முதலே தீவிரமாகப் பணியாற்றி வந்தவர்களில் இயக்குனர் களஞ்சியமும் ஒருவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியில் பயணித்த அவருக்கு, இரண்டு முறை நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட சீமான் வாய்ப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு.. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய சார் பதிவாளர்.. நீதிமன்றம் விதித்த அதிரடி நிபந்தனை!
அடுத்தடுத்து நகரும் முக்கிய புள்ளிகள்:
நாம் தமிழர் கட்சிக்கு இந்த விலகல் அடுத்தடுத்த பேரிடியாகப் பார்க்கப்படுகிறது. நேற்றுதான் அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் சங்கன் கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்தார். அவர் விலகிய அடுத்த நாளே, கட்சியின் முக்கியப் புள்ளியான இயக்குனர் களஞ்சியமும் விலகியிருப்பது நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.