மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பாஸ் சர்ச்சை.. “நானோ என் குடும்பமோ ஒரு பாஸ் கூட வாங்கவில்லை!”.. அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
Minister Nirmal Kumar Clarification: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஐபி பாஸ்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார். தானோ தனது குடும்பத்தினரோ எந்த பாஸையும் பெறவில்லை எனக் கூறிய அவர், மின்வெட்டு சிக்கல்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைத் தயார்நிலைகள் குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் விரிவாக விளக்கமளித்தார்.
மதுரை, செப்.18: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா சமீபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது. இக்கோயில் குடமுழுக்கு விழாவிற்காக வழங்கப்பட்ட சுமார் 9,000 விஐபி பாஸ்கள் வழங்கும் முறையில் முறைகேடுகள் நடந்ததாகவும், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு காரணமாகப் பொதுமக்கள் உரிய முறையில் தரிசனம் செய்ய முடியாமல் அவதிப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இச்சூழ்நிலையில், மின்சாரம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார், இந்த பாஸ் சர்ச்சைக்கும், மாநில மின் விநியோகச் சிக்கல்களுக்கும் விரிவான விளக்கங்களை அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு.. “இது ஆன்மீக விழாவா.. அமைச்சர்களின் குடும்ப விழாவா?”.. தவெக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்!!
குடமுழுக்கு பாஸ் விவகாரத்தில் அமைச்சர் மறுப்பு:
குடமுழுக்கு பாஸ் விநியோகம் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், “மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை மிகவும் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அரசின் ஒரே முன்னுரிமையாக இருந்தது. பாஸ் வழங்கும் பணிகள் முழுமையாக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலேயே நடைபெற்றன. இதில் என்னுடைய தலையீடோ அல்லது மற்றவர்களின் தலையீடோ முற்றிலும் இல்லை. நானோ அல்லது என்னுடைய குடும்பத்தினரோ கூட ஒரு பாஸ் கூட வாங்கிப் பயன்படுத்தவில்லை. மாவட்டப் பொறுப்பு அமைச்சரான நான் மேடையில் நிற்காமல், கமாண்ட் சென்டரில் இருந்து கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணிகளில்தான் ஈடுபட்டேன்” என்று உறுதியளித்தார். மேலும், பொதுமக்கள் சிரமமின்றித் தரிசனம் செய்ய ஏதுவாகத் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே (காலை 8:15 மணிக்கே) தரிசனப் பாதைகள் திறந்துவிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்வெட்டுக்கான காரணங்கள்:
சென்னையின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை. BSNL போன்ற நிறுவனங்களும், இதர ஒப்பந்ததாரர்களும் கேபிள் பதிப்பதற்காகத் தோண்டும்போது நமது முதன்மை மின்கேபிள்களைச் சேதப்படுத்தி விடுகின்றனர். இதனாலேயே மின் தடை ஏற்படுகிறது. சென்னையின் ஸ்டான்லி பகுதியில் BSNL நிறுவனத்தினர் மின்கேபிளைச் சேதப்படுத்தியதால் மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டபோது ஏற்பட்ட அதிகப்படியான மின் சுமையால் மின்மாற்றியில் தீ விபத்து ஏற்பட்டது. இனிமேல் அனுமதி இன்றித் தோண்டி மின் கேபிள்களைச் சேதப்படுத்தும் BSNL மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது காவல்துறை மூலம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஒரு பக்கம் ரூ.16 கோடி.. மறுபக்கம் ரூ.7,000 மட்டுமே!.. இடைத்தேர்தலில் மோதும் வேட்பாளர்களின் சொத்து விவரம் வெளியீடு!!
பேரிடர் மேலாண்மை தயார்நிலை:
வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்ளப் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் சீரமைப்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், கஜா புயலின் போது ஏற்பட்டது போன்ற தாமதங்கள் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், பொதுமக்கள் மின் புகார்களைப் பதிவு செய்ய ‘மின்னகம்’ சேவை மூலம் நாளொன்றுக்கு 10,000-க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு வருவதாகவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளர் புகார்களைத் தீர்க்கப் புதிய செயலி மற்றும் டூல் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.