சாதி பெயர் கூடாது… தீண்டாமை உறுதிமொழி… – ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான கட்டுபாடுகள் என்ன?

Jallikattu Preparations Begin: தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாதி பெயர் கூடாது... தீண்டாமை உறுதிமொழி... - ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான கட்டுபாடுகள் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

03 Jan 2026 18:25 PM

 IST

மதுரை, ஜனவரி 3 : மதுரை (Madurai) மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3, 2026 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது?  போட்டிகளுக்கான விதிமுறைகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் எப்போது?

அதன் பின்னர், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகளை மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி, ஜனவரி 15, 2026 அன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 16, 2026 அன்று பாலமேட்டிலும், மற்றும் ஜனவரி 17 , 2026 அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.

இதையும் படிக்க : ஜல்லிக்கட்டு பிரியர்களே தயாரா…மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!

கட்டுப்பாடுகள் என்ன?

அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்கும் அனைவரும் கட்டாயமாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக நல்லிணக்கத்தை பேணும் நோக்கில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாடுகளின் உரிமையாளர்களின் பெயரை அறிவிக்கும் போது சாதிப் பெயர்களை குறிப்பிடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்குவதற்கு முன் மருத்துவக் குழுவினரால் உடல் தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மது அல்லது ஊக்கமருந்து உட்கொண்டவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, களத்தில் ஒரே நேரத்தில் ஒரு காளையை ஒரே நபர் மட்டுமே அடக்க அனுமதிக்கப்படும் என்றும், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 25 பேர் மட்டுமே களத்தில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பல ஆண்டு கால போராட்டத்துக்கு முடிவு…மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…முதல்வரின் பொங்கல் பரிசு!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 3, 2026 அன்று நடைபெற்ற இந்த முன்னேற்பாடு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவர்களால் விரிவான உடல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. காளைகளின் கண்கள், கொம்புகள், திமில், பற்கள் மற்றும் உயரம் ஆகியவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

அவனியாபுரத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள, ரூ.67 லட்சம் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டெண்டர் மூலம் கள அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை வளர்ப்போர், தங்களது காளைகளை போட்டிக்குத் தயார்படுத்தி வருகின்றனர். நீச்சல் பயிற்சி, மண் தோண்டும் பயிற்சி, ஓட்டப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுடன், சத்தான உணவுகளும் காளைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஷாருக்கான் நாக்கை அறுத்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்.. அதிர்ச்சி கிளப்பும் இந்து அமைப்புகள்
இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட 'சுனாமி ரெடி' கிராமங்கள்
தேவையில்லாத பொருட்களை வாங்குகிறீர்களா? மனநலப் பிரச்னையாக மாறும் ஆபத்து
கோஹினூர் வைரம் அணிவது துரதிர்ஷ்டமா? இதுதான் உண்மையான வரலாறு