ஜனவரி 1 முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிப்பு – பயணிகள் கடும் அதிருப்தி
Vaigai Express : மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ரயில்களில் ஒன்று. இந்த நிலையில் இந்த ரயிலின் பயண நேரம் கூடுதலாக 25 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை, டிசம்பர் 28 : மதுரை (Madurai) – சென்னை இடையே இயக்கப்படும் முக்கியமான அதிவேக இன்டர்சிட்டி ரயில்களில் ஒன்றான வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் (Train) பயண நேரம் ஜனவரி 1, 2026 புத்தாண்டு முதல் மேலும் 25 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட இந்த ரயில், தினமும் மதுரையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சுமார் பிற்பகல் 2.10 மணிக்கு சென்றடையும். பின்னர் மீண்டும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில், இரவு சரியாக 9.20 மணிக்கு மதுரையை அடையும். இதன் மொத்த பயண நேரம் 7 மணி 35 நிமிடங்களாக இருந்தது.
வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிப்பு
இந்த நிலையில் புதிய நேர அட்டவணைப்படி, இனி சென்னை எழும்பூரில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 1.15 மணிக்கே புறப்படும். இருப்பினும், மதுரை வந்தடையும் நேரம் இரவு 9.10 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண நேரம் மொத்தமாக 25 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து தூங்கிய 2 இளைஞர்கள்… கீழே விழுந்து மரணம் – அதிர்ச்சி சம்பவம்




தற்போது சென்னை – மதுரை இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு மின்மயமாக்கப்பட்ட நிலையிலும் பயண நேரம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். குறிப்பாக சோழவந்தான் ரயில் நிலையத்தில் இரவு 8 மணிக்கு வரும் இந்த ரயில் அங்கிருந்து 15 நிமிடங்களில் மதுரை ரயில் நிலையத்தை அடையும். ஆனால் தற்போது இரவு 9.10 மணியளவில் தான் மதுரையை அடையும் என்பது எப்படி நியாயம் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பயணிகள் அதிர்ச்சி
பொதுவாக இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்திற்கு பெயர் பெற்றது. குறிப்பாக திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் ரயிலை விட இந்த ரயில் முன்னதாக சென்னை வந்தடையும். இந்த நிலையில் ரயில் பயண நேரம் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த ரயில் சென்னை எழும்பூர் – தாம்பரம் இடையிலான தூரத்தை 25 நிமிடங்களில் கடக்கும் நிலையில், சோழவந்தான் – மதுரை இடையிலான 21 கி.மீ தூரத்திற்கு ஒரு மணி நேரமாகுமா என பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதையும் படிக்க : தொடர் விடுமுறை-பண்டிகைகள்…சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!
பொதுவாக மதுரை சுற்றுவட்டார மாவட்ட மக்களால் மிகவும் நேசிக்கப்படும் ஒரு ரயில் வைகை எக்ஸ்பிரஸ். இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆகஸ்ட் 15 அன்று இந்த ரயிலுக்கு பயணிகள் கேக் வெட்டிக்கொண்டாடுவது வழக்கம். அந்த அளவுக்கு இந்த ரயிலை மதுரை மக்கள் நேசிக்கிறார்கள். சமீபத்தில் ரயில்களின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பயண நேரமும் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.