நாகையில் கரை ஒதுங்கிய 3.5 அடி நீள மர்ம பொருள்…மேட் இன் யுஎஸ்ஏ எழுத்து…பெரும் பரபரப்பு!
Mysterious Rocket Like Object Washed Ashore: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் ராக்கெட் போன்ற 3.5 அடி நீளமுள்ள மர்மமான பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இந்த பொருள் குறித்து வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் காவல் நிலைய எல்லை பகுதியில் பிரதாபராமபுரம் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பொது மக்கள் அதிகளவு வந்து செல்வார்கள். அதன்படி, இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27) அதிகாலை அந்தப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்கள் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து, கீழையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், கீழையூர் போலீசார் மற்றும், வெடி குண்டு செயலிழப்பு மற்றும் கண்டுபிடிப்பு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த மர்ம பொருள் ராக்கெட் போன்ற அமைப்பில் இருந்தது. தொடர்ந்து, அந்த பொருளை போலீசார் கைப்பற்றி கீழையூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
கரை ஒதுங்கிய 3.5 அடி நீள மர்ம பொருள்
இந்த பொருளை போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதில், அந்த பொருளானது சுமார் 3.5 அடி நீளமும், 20 சென்டி மீட்டர் மற்றும் 15 சென்டி மீட்டர் சுற்றளவும் இருந்தது. மேலும், இதில் இரண்டு ஃபைபர் குழாய்கள் இணைக்கப்பட்டிருந்தன. அதன் இடையில் இரும்பு கம்பி பொருத்தப்பட்டிருந்தது. இந்த பொருளின் மேல் பகுதியில் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் எல்இடி லைட் இருந்தது.
மேலும் படிக்க: தாறுமாறாக ‘தார்’ காரை ஓட்டிய சிறுவன்.. பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து!!




மேட் இன் யுஎஸ்ஏ (அமெரிக்கா) எழுத்து
இந்த பொருளின் பின் பகுதியில் மேட் இன் யுஎஸ்ஏ (அமெரிக்கா) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருந்தன. இது குறித்து, நாகப்பட்டினம் வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் கண்டுபிடிப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பொருள் கடற்கரைக்கு வந்தது எப்படி? இதனை யாரேனும் கொண்டு வந்து இங்கே போட்டு சென்றனரா. அல்லது கடலில் தவறி விழுந்து அலையில் கரை ஒதுங்கியதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை
இந்த மர்ம பொருள் கடற்கரையில் கிடந்ததை பார்த்த பொது மக்கள் வெடிகுண்டு என நினைத்து அச்சமடைந்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அதனை கைப்பற்றியதுடன், அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தனர். மேலும், இந்த மர்ம பொருள் குறித்து தீவிர விசாரணை மற்றும் சோதனை செய்தால் தான் முழு விவரம் தெரிய வரும் என்று காவல் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: தொடர் விடுமுறை-பண்டிகைகள்…சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்!