“முதலமைச்சருக்கு அரோகரா முழக்கம்!”.. திருச்செந்தூர் விழா விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
Tiruchendur Kandasasti Arohara slogans: திருச்செந்தூர் கோயில் கந்த சஷ்டி விழாவின் போது முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு 'அரோகரா' முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மற்றும் மத விழாக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் கோரப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, நவ.21: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் போது, முதலமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு ‘அரோகரா’ என முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டையைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருண்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஆகிய இருவரும் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தின் போது, முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்திற்குப் பதிலாக, இந்த ஆண்டு பாடகர்கள் முதலமைச்சருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என முழக்கம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் முருக பக்தர்களிடையே மனவேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ராணிப்பேட்டை பெண் கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. நகைக்காக பெற்ற தாயை மகளே கொன்றது அம்பலம்!!
கோஷம் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை:
கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது இதுபோன்ற முழக்கங்களை எழுப்பிய நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்த இந்து சமய அறநிலையத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுக்களில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மத விழாக்களில் வழிகாட்டு நெறிமுறைகள்:
இத்தகைய நிகழ்வுகளைத் தொடர்ந்து அனுமதிக்கும் சூழல் உருவானால், எதிர்காலத்தில் நடைபெறும் மத நிகழ்வுகளின் போதும் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நடைபெறும் விழாக்களில் அரசியல் புகழ்பாடும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி இரண்டு மனுக்களும் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : முதலீடுகளை ஈர்ப்பதில் ஆரோக்கியமான போட்டி – ஆந்திராவுக்கு முதலீட்டு தகவல்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு – கைடன்ஸ் தமிழ்நாடு விளக்கம்
விரைவில் விசாரணைக்கு வரும் மனுக்கள்:
திருச்செந்தூர் திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் தொடர்பான இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் அருண்குமார் மற்றும் தீரன் திருமுருகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள இந்த இரண்டு மனுக்களும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.