ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
Car Accident: ஏற்காடு குப்பனூர் மலைப்பாதை வாணியார் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் எடப்பாடியைச் சேர்ந்த சபரீஷ் (26) உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நவம்பர் 21, 2026: சேலம் மாவட்டம் ஏற்காடு குப்பனூர் மலைப்பாதையில் கார் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காரில் பயணம் செய்த நான்கு பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற 5 பேர்
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சபரீஷ் (26), ஜீவா (26), பாலாஜி (47), தேவன் (55), அழகேசன் (47) ஆகிய ஐந்து பேரும் நேற்று ஏற்காட்டுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக, ஐந்து பேரும் ஈகோ காரில் குப்பனூர் மலைப்பாதை வழியாகச் சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: அரசு வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி சைபர் மோசடி.. 3 மாநிலங்களுக்கு விரைந்த தனிப்படை போலீசார்!!
தடுப்புச் சுவரைத் தாண்டி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்
அப்போது, வாணியார் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
கிராம மக்கள் உதவியுடன் மீட்புப் பணி – ஒருவர் உயிரிழப்பு
விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று, அப்பகுதி கிராம மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காரில் சிக்கிய ஐந்து பேரும் மீட்கப்பட்டனர்.
மேலும் படிக்க: கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு.. மத்திய மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் ஏற்காடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த சபரீஷ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற நான்கு பேருக்கும் ஏற்காடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலாவுக்காகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.